இடிந்து விழும் நிலையில் கு.மா.வா., குடியிருப்பு; விமோசனம் எப்போது?| Dinamalar

இடிந்து விழும் நிலையில் கு.மா.வா., குடியிருப்பு; விமோசனம் எப்போது?

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 10, 2022 | கருத்துகள் (16) | |
சென்னை: தரமணி, கானகம் பகுதியில், 1990ல் கட்டப்பட்ட, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் உறுதியிழந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்காக, 2020ல் அரசு சார்பில், 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.புதிய குடியிருப்புகள் கட்டுவதில், இருவேறு நலச்சங்கங்கள் முரண்படுவதால், தற்போதைய கட்டடத்தை இடித்துவிட்டு,

சென்னை: தரமணி, கானகம் பகுதியில், 1990ல் கட்டப்பட்ட, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் உறுதியிழந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்காக, 2020ல் அரசு சார்பில், 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

புதிய குடியிருப்புகள் கட்டுவதில், இருவேறு நலச்சங்கங்கள் முரண்படுவதால், தற்போதைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளது. திருவொற்றியூர் சம்பவம் போல், அசம்பாவிதம் நடப்பதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.latest tamil news
தரமணி, கானகம் பகுதியில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், 1990ம் ஆண்டு, 6.50 ஏக்கர் பரப்பில், 30 'பிளாக்'குகளில் 480 வீடுகள் கட்டப்பட்டன. மூன்று அடுக்கு கொண்ட கட்டடத்தில், ஒவ்வொரு வீடும், 210 சதுர அடி பரப்பு உடையது. அப்போது, குலுக்கல் முறையில், 1.48 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டது.

வளாகத்தில், இரண்டு பூங்காக்கள், 20 அடி அகலத்தில் ஐந்து சாலைகள், குடிநீர் தேக்கத்திற்கான தொட்டி, கழிவு நீர் அகற்று நிலையம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டன. இந்நிலையில், 2018ம் ஆண்டு, மேல் தளத்தில் இருந்த வீடுகளில், மேற்கூரையில் சேதம் ஏற்பட்டதால், மழை நீர் கசிவு அதிகரித்தது.இதனால், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்கள் கருதி, அந்த வீடுகளில் குடியிருந்தோர், வீடுகளை காலி செய்தனர். கடந்த, 2020ம் ஆண்டு, ஐ.ஐ.டி., மற்றும் மாநகராட்சி கட்டட வல்லுனர்கள், குடியிருப்புகளை ஆய்வு செய்தனர். அனைத்து வீடுகளும், சேதமடைந்து இருந்ததால், வசிக்க தகுதியற்ற குடியிருப்பு என, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சான்று அளித்தனர்.


latest tamil news
அதே ஆண்டு, நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்து, வேறு இடங்களில் குடியேறினர்.குடியிருப்பு கட்டடம் மிகவும் சேதமடைந்ததால், இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய குடியிருப்பு கட்ட, முடிவு செய்யப்பட்டது.இதற்காக, 2020 ஜூனில், அரசின் சார்பில், 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. புதிய குடியிருப்பில், தலா 400 சதுர அடி பரப்பு வீதம், புதிதாக 600 வீடுகள் கட்ட, முடிவு செய்யப்பட்டது.

அங்கு வசிப்போர், தரைத்தளத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்ற கோரிக்கை வைத்ததையடுத்து, ஐந்து மாடிகளுடனான, 500 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு வீடும், 13 லட்சம் ரூபாய் என மதிப்பீடும் செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசு வழங்கும் நிதி போக, தலா, 1.50 லட்சம் ரூபாய் வீதம், பயனாளிகள் செலுத்த வேண்டும் என, அரசு முடிவு செய்தது. இதற்காக, 300க்கும் மேற்பட்டோர், தங்கள் ஆவணங்களை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைத்தனர்.

புதிய குடியிருப்பு கட்டும் வரை, மாற்று இடத்தில் வசிக்க வேண்டி, பொருட்கள் இடம் மாற்றம் செய்ய, தலா, 8,000 ரூபாய் வழங்க, வாரியம் முடிவு செய்தது.2020 டிசம்பரில் பணிகள் துவங்க இருந்த நிலையில், அங்குள்ள, தேசப்பிதா மகாத்மா காந்தி நலச்சங்கத்தினர், பிள்ளைகள் பள்ளி படிப்புக்காக, நீதிமன்றத்தை அணுகி, ஆறு மாதம் அவகாசம் கோரினர்.

இதையடுத்து, கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. அதன் பின், வீட்டு வசதிவாரியம் வழங்குவது போல், யு.டி.எஸ்., எனப்படும், நிலத்தின் பிரிபடாத பாகத்துடன் சேர்த்து, வீடுகளை கட்டித் தரும்படி வலியுறுத்தினர். இதற்கான பிரிவு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இல்லாததால், அதிகாரிகள் மறுத்தனர். இதையடுத்து, பல்வேறு அழுத்தம் காரணமாக, கட்டுமான பணியை வாரியம் தொடரவில்லை.


latest tamil news
அங்குள்ள, மற்றொரு சங்கமான, அப்துல் கலாம் நலச்சங்கத்தினர், வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதால், வாரியத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தற்போதைய குடியிருப்பை இடித்துவிட்டு, புதிய குடியிருப்பு கட்ட வலியுறுத்தி உள்ளனர்.

எனினும், சேதமடைந்த குடியிருப்புகளில் தொடர்ந்து வசதிக்கும் சிலர், வாரிய அதிகாரிகளை செயல்பட விடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. கடந்த, 27ம் தேதி, திருவொற்றியூரில் உள்ள, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டும் பணியை உடனடியாக துவங்காவிட்டால், தரமணி, கானகம் குடியிருப்புகளும் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். உடனே குடியிருப்பை இடித்துவிட்டு, புது குடியிருப்பு கட்ட வேண்டும் என ஒரு பிரிவினரும்; வீட்டுவசதி வாரியம் போல், நிலத்துடன் சேர்த்து வீடு ஒதுக்கி தர வேண்டும் என மற்றொரு பிரிவினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அதிகாரிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

கட்டடம் மீதான முடிவை விரைந்து எடுப்பதின் மூலம், நுாற்றுக்கணக்கான உயிர்களுக்கு அபாயம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதால், அதிகாரிகள் தீவிர கதியில் ஆலோசித்து வருகின்றனர். திருவொற்றியூர் சம்பவம் போல், இங்கும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கட்டடம் விரிசல் விழுந்து, அபாய கட்டத்தில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக, மாதத்திற்கு, ஐந்து பேர் வீதம் வீட்டை காலி செய்து வருகின்றனர். திருவெற்றியூர் சம்பவம், எங்களை பீதியடைய செய்துள்ளது. புது குடியிருப்பு கட்ட திட்டமிட்டால் தான், மாற்று இடத்தில் வசிக்க முடியும். அதிகாரிகள் முடிவுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தால் தான், நிலைமை சீராகும்.- விக்டர், 62, குடியிருப்புவாசி.


latest tamil news
புது குடியிருப்பு கட்ட திட்டமிடும்போதில் இருந்தே, அரசுக்கு, நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஏற்கனவே, சேதமடைந்த வீடுகள், சமீபத்திய தொடர் கனமழையால், மேலும் வலுவிழந்து உள்ளன. திருவெற்றியூர் சம்பவத்திற்கு பின், பெரும்பாலானோர், வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளனர். அரசு தான், இடம் பெயர தேவையான உதவிகள் செய்ய வேண்டும். புது குடியிருப்பையும் விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.-சுப்பிரமணி,பொருளாளர், அப்துல்கலாம் நலச்சங்கம்.

வீட்டு வசதி வாரியம் போல், எல்.ஐ.ஜி., பிரிவில் வீடு கட்டி தந்தால் தான், எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வங்கி கடனும் வாங்க முடியும். அதற்கு ஏற்ப, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கனகப்பன், செயலர்,தேசப்பிதா மகாத்மாகாந்தி நலச்சங்கம்.

தரமணியில் உள்ள குடியிருப்பு அபாய கட்டத்தில் உள்ளது. இதை, பல முறை அங்கு வசிப்போரிடம் கூறி வருகிறோம். ஐ.ஐ.டி., ஆய்வு அறிக்கையையும் காட்டிவிட்டோம். ஒரு பிரிவினர் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். மற்றொரு பிரிவினர், விதண்டாவாதமாக பேசுகின்றனர். நிலத்துடன் வீடு ஒதுக்க, வாரியத்திற்கு அதிகாரமில்லை. நீதிமன்ற தடை உத்தரவு இல்லை. அசம்பாவிதம் நடைபெறாத வகையில், விரைந்து நடவடிக்கை எடுப்போம். அதற்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X