தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை:தமிழக அமைச்சரவையின் அறிவுரையின் படி தான், தமிழக கவர்னர் செயல்பட வேண்டும். அதற்கு புறம்பாக செயல்பட்டால், அதற்குரிய விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
அடேங்கப்பா... பயங்கரமான மிரட்டலாக இருக்கிறதே... அப்படியே, என்ன செய்வீர்கள் என்றும் கூறினால் நன்றாக இருக்குமே!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'நீட்' தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்தை நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், 'தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை நீக்கி விடுவோம்' என்று கூறினாரே, உதயநிதி ஸ்டாலின்; அது என்னவாயிற்று... இவர்கள்அனைவரும் நடத்தும் நாடகமே இந்த நீட் எதிர்ப்பு!
ஆளும், தி.மு.க.,வின் இந்த நாடகம், அனைத்து கட்சி கூட்டம் மூலம் உச்சகட்டத்தை அடைந்துஉள்ளது போல தெரிகிறதே... இதற்கு பிறகு என்ன செய்வரோ?
தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை: 'முதுகலைமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லும்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு, வரலாற்று சிறப்பு மிக்கது. இது, மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து வரும் முதல்வர் ஸ்டாலினின் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம்.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் வந்துள்ள இந்த தீர்ப்புக்கு, தி.மு.க., ஆதரவு கட்சிகள் அனைத்தும் உரிமை கொண்டாடுகின்றன. அதனால், அந்த வெற்றி யாருக்கு சொந்தம் என்பதை, சீட்டு போட்டு குலுக்கி தான் எடுக்க வேண்டுமோ?
தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: பா.ஜ., மட்டுமே நீட்டை ஆதரிக்கிறது. அதிலிருந்தே, நீட் தமிழர்களுக்கு மகா கேடு என்பதை புரிந்து கொள்ளலாம்.

தி.மு.க., கூட்டணி கட்சிகள் எதிர்த்து, அதை, பா.ஜ., ஆதரிக்கிறது என்றால், அந்த திட்டம், நாட்டு மக்களுக்கு நல்ல திட்டமாகத் தான் இருக்கும் என்பதே, தமிழக மக்களின் திடமான எண்ணமாக இருக்கிறது. ஆனால், நீங்கள், 'உல்டா'டாக கூறுகிறீர்களே!
தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்திற்கு ஒரே நாளில், ராணுவ தளவாடங்களை தயாரிக்க திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், உ.பி.,க்கு மத்திய அரசு மூலம், 4,000 கோடி ரூபாய் முதலீடு வந்து உள்ளது. ஆனால், தமிழகத்திற்கு வரவில்லை.
தமிழகத்தில், சமீப காலமாக, 'ஜிந்தாபாத்' கட்சிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தான், நிதி வரவில்லையோ என்னவோ!
தமிழக பா.ஜ., பொறுப்பாளர்,சி.டி.ரவி அறிக்கை: உ.பி., கோவா உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள்அறிவிக்கப்பட்டு உள்ளன. பா.ஜ., வெற்றிக்கு கட்சியினர் அனைவரும் பாடுபட வேண்டும். ஓட்டு எண்ணப்படும் மார்ச் 10ம் நாளை வெற்றியுடன் கொண்டாடுவோம்.
வரும், 2024ல் வரவிருக்கும்லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக, இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் அமையும் என்கின்றனர்... பார்ப்போம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE