பிரதமராக தகுதி வேண்டும்!
வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'குஜராத் முதல்வராக இருந்த மோடி, இந்த நாட்டின் பிரதமராகும் போது தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த நாட்டின் பிரதமராக முடியாதா?' என்று கேள்வி கேட்கிறார், வி.சி., தலைவர் திருமாவளவன்.'பைலட்' ஆக வேலை பார்த்த ராஜிவ், அரசியலுக்கு வராமலேயே பிரதமர் ஆனார். ரயில் நிலையத்தில் தேநீர் விற்ற மோடி, பிரதமராகி விட்டார்.சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் அரசியலில் இறங்கி முதல்வராகினர்.சாதாரண பியூன் வேலைக்கு, குறைந்தபட்ச கல்வி தகுதி என்று ஒன்று இருக்கிறது. நம் நாட்டை ஆளும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தான் எந்த கல்வி தகுதியும் தேவையில்லை என்பதால், யார் எந்த பதவிக்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம்.
இந்த நாட்டின் பிரதமராக இருப்பவர், தேசிய சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டும். எந்த மதத்தையும், மொழியையும் எதிர்க்கும் குறுகிய மனம் படைத்தவராக இருக்கக் கூடாது. பிரிவினைவாத கொள்கை உடைய கட்சியை சேர்ந்தவராக இருக்க கூடாது.இப்போது சொல்லுங்கள், ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறதா?பல்வேறு கலாசாரம், பல மொழிகள் உள்ள இந்நாட்டில், 'திராவிட நாடு' கொள்கை உடைய தி.மு.க., தலைவருக்கு, பிரதமர் ஆசை வரலாமா?பிரதமர் என்பவர், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று நினைத்து வாழும் பண்பாளராக இருக்க வேண்டும். ஹிந்தி உட்பட பிற மொழிகள் மீது வெறுப்பு உடையவர் எப்படி இந்நாட்டின் பிரதமராக முடியும்?சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று வாழும் கொள்கை உடையவராக இருக்கக் கூடாது.இப்படி பல்வேறு தகுதிகள் இருப்பவரே, இந்நாட்டின் பிரதமராக இருக்க
முடியும்.'ஜெய்ஹிந்த்' என்று சொல்வதையே கேவலமாக நினைக்கும் முதல்வர் ஸ்டாலின் எப்படி பிரதமர் ஆக முடியும்? முதல்வர் ஸ்டாலினிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படி, 'ஐஸ்' வைக்கக் கூடாது. 'வாங்குன காசுக்கு மேல கூவுறாரு...' என்ற நடிகர் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு
வருகிறது.
ஒரு விமோசனம் ஏற்படாதா?
கே.அமுதன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரின் 34ம் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்க, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்திய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர் செல்வமும், பழனிசாமியும், அத்தோடு திரும்பி இருக்க வேண்டும்.அதை விடுத்து, 'எம்.ஜி.ஆர்., வழியில் நடை போட்டு, தி.மு.க.,வை வீழ்த்துவோம். மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம்' என்று, அனைவரும் உறுதிமொழி எடுத்துள்ளனர்.தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி அமைத்த தி.மு.க.,வே, 'மீண்டும் கருணாநிதி ஆட்சி அமைப்போம்' என்று ஒருபோதும் சொன்னதில்லை. அவ்வளவு ஏன்... கருணாநிதியே கூட சொன்னதில்லை!
அது போல ஜெயலலிதா கூட, 'எம்.ஜி.ஆர்., வழியில் நடை போடுவோம்' என்று சொன்னதில்லை.எம்.ஜி.ஆர்., மாதிரி உங்களில் யாரால் நடை போட முடியும்?எம்.ஜி.ஆர்., தான் திரைத் துறையில் ஈட்டிய பொருள் அனைத்தையும் தானமாகவும், தர்மமாகவும் வாரி வாரி வழங்கினார். இப்போது அ.தி.மு.க.,வின் கட்சி பொறுப்பில் உள்ள உங்களில் யாருக்கு அந்த வள்ளல் குணம் இருக்கிறது?
அடுத்து, 'ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம்' என்றும் உறுதிமொழி எடுத்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் அப்படி என்ன சிறப்பை கண்டனர்?சொத்து குவிப்பு குற்றத்திற்காக ஜெயலலிதாவுக்கு, நீதிபதி குன்ஹா அளித்த தண்டனையை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.ஜெயலலிதா சொத்து குவிப்பு குற்றவாளி என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், ஆட்சியில் அமர்ந்த நீங்களும் அதே வேலையை செய்ததால் தானே, தேர்தலில் தோல்வியை மக்கள் பரிசளித்தனர்.அதை மறந்து விட்டீரா, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்களே!மீண்டும் ஒரு ஜெயலலிதா ஆட்சியை தமிழகம் தாங்காது,
அ.தி.மு.க.,வினரே!அருள் கூர்ந்து அந்த அபிலாட்சையை மறந்து விடுங்கள்.ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த நீங்கள், நியாயமாக நடை போட்டிருந்தால் கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., நிச்சயம் வெற்றி பெற்று இருக்காது.ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, 'உருட்டுவதிலும், சுருட்டுவதிலுமே' குறியாக இருந்து செயல்பட்டதால் தான், மக்கள் உங்களை ஒதுக்கி, ஓரங்கட்டி, உட்கார வைத்து விட்டனர்.எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... இனி ஒருபோதும் அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் அமையாது. பட்டதெல்லாம் போதும்... தமிழக வாக்காளர்கள் இனி- மறுபடியும் அந்த தவறை செய்யவே மாட்டார்கள்.
அதற்காக, தி.மு.க.,வே காலத்திற்கும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அர்த்தமல்ல; தமிழக
அரசியலில் ஒரு விமோசனம் ஏற்படாதா என்ன!
இதற்கு எப்போது முடிவு?
எம்.கே.பார்த்தசாரதி, சென் னையிலிருந்து எழுதுகிறார்: சென்னையில் சாலையின் நடுவே ஆங்காங்கே, பாதாள சாக்கடைகள் மூடிகள் இருக்கும். அதை மக்கள் பார்த்தாலும், அது குறித்து சிந்திப்பதே இல்லை.பெருநகரங்களுக்கு, இந்த பாதாள சாக்கடை திட்டம் அவசியமானது. மழை காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பாதாள சாக்கடையை, அரசு கண்டு கொள்வதே இல்லை. சென்னை குடிநீர் வாரிய வீடுகள், குடியிருப்பு மற்றும் இதர கட்டடங்களுக்கு கழிவு நீர் இணைப்பும் வழங்கி வருகிறது.சென்னையில் மொத்தம், 15 மண்டலங்களில், 200 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகரின் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மழை காலத்தில் சாலையிலும், தெருவிலும் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து ஓடுகிறதே ஏன்?சென்னையின் புறநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் சிலர் கழிவுநீரை, மழைநீர் கால்வாயில் விடுகின்றனர்.
ஒவ்வொரு மழைக் காலத்திலும், மழைநீருடன் கழிவுநீர் கலந்து, ஊரே நாற்றம் எடுக்கிறது; நோயை பரப்புகிறது.பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் மட்டுமே, இந்த அவலங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE