நேர்காணல் வந்தவர்களுக்கு விருந்து தந்த பா.ஜ.,!
''வேலைக்கு வராமலே வந்ததா கணக்கு காட்டி மோசடி செஞ்சிருக்காங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் பக்கம் தோலபள்ளி ஊராட்சியில, 100 நாள் வேலை திட்டம் நடக்குதுங்க... சமீபத்துல, சென்னையில இருந்து வந்த ஊராட்சி தணிக்கை அதிகாரிகள் நடத்துன ஆய்வுல, ஆறு மாசமா 67 பேர் பணிக்கு வராமலே, வந்ததா கணக்கு காட்டி, 10 லட்சம் ரூபாய் வரை சுருட்டியிருக்கிறதை கண்டு பிடிச்சிருக்காங்க...
''ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்கிற மாதிரி, மாவட்டம் முழுக்கவே இந்த திட்டத்துல முறைகேடு நடந்திருக்குதுன்னு, அரசுக்கு தணிக்கை குழு அறிக்கை குடுத்திருக்குதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''கிராமத்துல ஏழை, எளியவா கஷ்டப்படப்டாதுன்னு கொண்டு வந்த திட்டத்துல, எப்படி எல்லாம் முறைகேடு பண்றா பாருங்கோ...'' என, அலுத்து கொண்ட குப்பண்ணாவே, ''தொழிற்சங்க ஆபீசை இழுத்து மூடிண்டு போயிட்டார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''எந்தக் கட்சி தொழிற்சங்க ஆபீசை சொல்லுதீரு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சென்னை, ராயப்பேட்டையில, காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி., தலைமை அலுவலகம் இருக்கு... சங்கத்தின் தலைவர் வி.சி.முனுசாமி, சமீபத்துல இந்த ஆபீசை பூட்டி, கதவுல ஒரு நோட்டீசை ஒட்டிட்டு ஆத்துக்கு போயிட்டார் ஓய்...
''அதுல, 'கொரோனா தாக்கம் அதிகமா இருக்கறதால, தலைமை ஆபீஸ்ல எந்த ஒரு நிகழ்ச்சியும், கூட்டமும் நடக்காது... தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆபீஸ் வர்றதை தவிர்க்கவும்... தொழிலாளர் பிரச்னை சம்பந்தமா அந்தந்த பகுதியில உள்ள சங்கங்கள் முடிவெடுத்து, அந்த முடிவை, தலைமைக்கு 'வாட்ஸ் ஆப்'ல அனுப்பினா போதும்'னு குறிப்பிட்டிருக்கார் ஓய்...'' என, விளக்கினார் குப்பண்ணா.
''தடபுடலா விருந்து குடுத்திருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''யாருக்கு, யாருங்க விருந்து தந்தது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக பா.ஜ., சார்புல, சென்னை மாநகராட்சி தேர்தல்ல போட்டியிட விருப்ப மனு தந்தவங்களிடம், சென்னை தி.நகர்ல இருக்கிற கமலாலயத்துல சமீபத்துல நேர்காணல் நடந்துச்சுல்லா... கட்சி ஆபீஸ் பக்கத்துல ஓட்டல்கள் எதுவும் இல்ல வே...
''இதனால, நேர்காணலுக்கு வந்தவங்களுக்கு, கட்சி ஆபீஸ் சார்புலயே தடபுடலா விருந்து சாப்பாடு தயார் பண்ணிட்டாவ வே...
''காலையில சுடச்சுட இட்லி, கிச்சடி, தோசை, வடை, கேசரி; மதியம் வெஜிடபிள் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், மோர், வடை, பாயாசம்; ராத்திரி சப்பாத்தி, பரோட்டா, இடியப்பம், இட்லின்னு வகை, வகையா விருந்து போட்டு அசத்திட்டாவ... 'சீட் கிடைக்குதோ இல்லையோ, வயிறார சாப்பாடு கிடைச்சதுப்பா'ன்னு பலரும் திருப்தியா ஏப்பம் விட்டுட்டே போனாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
''விதவிதமா சாப்பாட்டு பேரைச் சொல்லி, பசியை துாண்டிட்டீரே... நான் ஆத்துக்கு கிளம்பறேன்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கலைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE