சென்னை :''கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் பங்களிப்பு அவசியம்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பத்திரிகை தகவல் அலுவலகம், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை, யுனிசெப் ஆகியவை இணைந்து, கொரோனா விழிப்புணர்வு குறித்து, ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு பயிலரங்கை சென்னையில் நேற்று நடத்தின. பயிலரங்கில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதற்கு, ஒமைக்ரான் வைரஸ் முக்கிய காரணம். அவசர சிகிச்சை பிரிவில், 1 சதவீத நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தொற்றை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
கொரோனா தொற்று சவால்களை எதிர்கொள்ளும் போது, மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது.
தகவல்களை வெளியிடும் முன், உண்மைதன்மையை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பு இன்றி, பொது சுகாதாரத்தை முழு அளவில் உறுதி செய்வது இயலாத காரியம். கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளிலிருந்து, தமிழகம் வெற்றிகரமாக மீண்டெழுந்ததை போல, மூன்றாவது அலையில் இருந்தும் மீண்டெழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE