பறக்குது பஞ்சு விலை... பதறுது ஜவுளித்துறை : யூக வணிகம், பருத்தி மீதான இறக்குமதி வரியால்...| Dinamalar

பறக்குது பஞ்சு விலை... பதறுது ஜவுளித்துறை : யூக வணிகம், பருத்தி மீதான இறக்குமதி வரியால்...

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (5) | |
நம் தேசத்தின் பலமும் பலவீனமும் மக்கள் தொகைதான். அனைவருக்கும் கல்வி சுகாதாரம் குடிநீர் உணவு அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் விட வேலை வாய்ப்புத் தர வேண்டிய மாபெரும் பொறுப்பில் இருக்கின்றன நமது அரசுகள். ஆனால் பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கின்றன. பெருமளவில் வேலை வாய்ப்பைத் தரும் ஜவுளித்துறை மத்திய மாநில
 பறக்குது பஞ்சு விலை... பதறுது ஜவுளித்துறை

நம் தேசத்தின் பலமும் பலவீனமும் மக்கள் தொகைதான். அனைவருக்கும் கல்வி சுகாதாரம் குடிநீர் உணவு அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் விட வேலை வாய்ப்புத் தர வேண்டிய மாபெரும் பொறுப்பில் இருக்கின்றன நமது அரசுகள். ஆனால் பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கின்றன. பெருமளவில் வேலை வாய்ப்பைத் தரும் ஜவுளித்துறை மத்திய மாநில அரசுகளின் உதவியின்றி அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது.

நம்மை விட பெரிய நாடான சீனாவும் நம்மை விட மிகச்சிறிய நாடுகளான வியட்நாம் வங்கதேசம் இந்தோனேஷியா கம்போடியா போன்ற நாடுகளும் உலகச்சந்தையில் ஜவுளி ஏற்றுமதியில் மிகப்பெரிய உயரத்தை எட்டி நிற்கின்றன. உதாரணமாக சீனா 35 சதவீத சந்தையை கைப்பற்றியுள்ளது. இதுவரை இந்தியாவால் ஜவுளி ஏற்றுமதியில் நான்கு சதவீதத்தைக் கூடத் தாண்ட முடியவில்லை.


அடேங்கப்பா... அமெரிக்க சந்தைதுணி வகைகள் நுால் ஆயத்த ஆடைகள் பெட்ஷீட் திரைச்சீலைகள் என ஜவுளி ஏற்றுமதிச் சந்தை பரந்து விரிந்து கொண்டே இருக்கிறது. ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவிலிருந்து ஜவுளி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைத் தவிர்த்து ஆண்டுக்கு 6 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டுச் சந்தையில் ஜவுளி விற்பனை நடக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜவுளிச் சந்தையாக அமெரிக்கா திகழ்கிறது. ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு அமெரிக்கா ஜவுளி இறக்குமதி செய்கிறது. அதில் சீனா 25 சதவீதம் வியட்நாம் 18 சதவீதம் வங்கதேசம் 9 சதவீதம் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்கின்றன. இதிலும் இந்தியாவின் பங்களிப்பு வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே. அதனால் மிகப்பெரிய ஏற்றுமதி வாய்ப்பு ஜவுளித்துறையில் காத்திருக்கிறது.'கோவிட்' பாதிப்புக்குப் பின் ஆடைகள் அல்லாத ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இந்தப் பிரிவில் சீனாவின் ஏற்றுமதி சதவீதம் 37 ஆகவும் இந்தியாவின் ஏற்றுமதி 18 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கோவிட்டுக்கு முந்தைய காலத்தை விட குறைந்துள்ளது.


latest tamil news

ஒரு பில்லியன் டாலர் (ரூ.7500 கோடி) அளவுக்கு ஜவுளி ஏற்றுமதி அதிகரித்தால் ஒன்றரை லட்சம் பேருக்கு ஜவுளித்துறை வேலை வாய்ப்பு கொடுக்கும். அதே அளவு முதலீடு இரும்பு உருக்கு துறையிலோ ரசாயன துறையிலோ செய்யப்பட்டால் அதிகபட்சமாக 3000 பேருக்குதான் வேலை கிடைக்கும். அதே மதிப்புக்கு ஜவுளி ஏற்றுமதி அதிகரித்தால் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புத் தர முடியும். தமிழகத்தில் மட்டும் ஜவுளித்துறையின் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர்.


எகிறிய பஞ்சு விலை... ஏனிந்த நிலைஜவுளித்தொழிலுக்கான மிக முக்கியமான மூலப்பொருள் பருத்தி பஞ்சு. நுால் உற்பத்திச் செலவில் பஞ்சு விலைதான் 65 சதவீதம். அதனால்தான் பஞ்சு விலை உயர்ந்தால் நுால் விலை உயர்கிறது. நுால் விலை உயர்ந்தால் ஜவுளித்துறை கலக்கமடைகிறது. ஏனெனில் மற்ற விலைகளைப் போல ஜவுளி விலையை நினைத்ததுபோல ஏற்ற முடியாது. நம்மை விட மிகக்குறைவான விலைக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய பல நாடுகள் காத்திருக்கின்றன. விலை உயர்ந்தால் உள்நாட்டு ஜவுளி வர்த்தகமும் பாதிப்புக்குள்ளாகும்.
அதனால் பஞ்சு விலை உயர்ந்தால் ஜவுளித்துறையே ஆடிப்போய் விடும். இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு வரலாறு காணாத ஒன்றாக இருப்பதுதான் ஜவுளித்துறையை கலங்கடித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளில் பஞ்சு விலை 200 சதவீதம் அளவுக்கு எகிறி இருக்கிறது.கடந்த ஆகஸ்ட் செப்டம்பரில் ரூ.56 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு அக்டோபரில் 64 ஆயிரம் நவம்பரில் ரூ.68 ஆயிரம் டிசம்பரில் ரூ.70 ஆயிரமாக உயர்ந்து தற்போது ரூ.76 ஆயிரமாக உச்சத்தில் நிற்கிறது. இதற்கேற்ப ஜவுளி உற்பத்திக்கான ஒரு கிலோ நுால் (30 ஆம் நம்பர்) விலையும் ரூ.275 ரூ.312 என படிப்படியாக உயர்ந்து இப்போது ரூ.342 ஆகவுள்ளது.
கடந்த 2020 ஆகஸ்ட்டில் ஒரு கேண்டி விலை ரூ.36,500 ஆக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் 200 சதவீதம் உயர்ந்து 76 ஆயிரம் ரூபாய் என்ற இமாலய உயரத்தில் நிற்கிறது. இது இயல்பற்ற போக்கு என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. களமிறங்கி விசாரித்தால் யூக வணிகமே அதி முக்கியமான காரணமென்பது புலனாகிறது.


யூக வணிகர்களின் விளையாட்டுகோவிட் பாதிப்புக்குப் பின் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. மொத்தம் 37 நாடுகள் கடனுக்கு பூஜ்யம் சதவீதம் வட்டி என்று அறிவித்தன. இந்தியாவிலும் இது 50 சதவீதமாகக் குறைந்தது. பல நாடுகள் கரன்சியை அதிகமாக அச்சடித்தன. அமெரிக்கா நுாறாண்டுகளில் தயாரித்த அளவிலான டாலரை கடந்த இரண்டு ஆண்டுகளில் தயாரித்து புழக்கத்தில் விட்டது. அதனால் தாராளமாக கடன் பெறப்பட்டது. பணப்புழக்கம் அதிகமானது.
ஆடைகள் கொள்முதலும் அதன் தொடர்ச்சியாக ஜவுளித்துறையின் தேவையும் அதிகரித்தது. இதே காலகட்டத்தில் பணவீக்கமும் அதிகமாகி பெட்ரோல் டீசல் உணவுப் பொருட்கள் எல்லாப் பொருட்களின் விலையும் உயர்ந்தது.

அதேநேரத்தில் தங்கம் கச்சா எண்ணெயில் முதலீடு செய்வதை விட பருத்தி பஞ்சில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை உலக அளவில் அதிகமாகியது.

அதாவது பஞ்சை தேவைக்காக வாங்குவோரை விட யூக வணிகத்தில் வாங்குவோர் அதிகமாயினர். குறிப்பாக 'கமாடட்டி' சந்தையில் பெரும் நிதியை முதலீடு செய்யும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்கள் பஞ்சில் அதிகமாக முதலீடு செய்ததால் 'ஆன்லைன்' வர்த்தகத்திலேயே பஞ்சின் விலை எகிறியது. இந்தியாவில் ஜவுளி உற்பத்திக்கு 360 லட்சம் பேல் பஞ்சு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 'ஓப்பனிங் பேலன்ஸ்' 50-60 பேல்கள் இருப்பில் இருக்கும். ஆண்டுக்கு 30லிருந்து 40 லட்சம் பேல்கள் இறக்குமதி செய்யப்படும். இறக்குமதி வரியால் இது முற்றிலும் குறைந்துள்ளது. ஏற்கனவே யூக வணிகத்தால் பஞ்சின் விலை உயர்ந்துள்ள நிலையில் பருத்தி மீதான இறக்குமதி வரி விதிப்பும் விலையை மேலும் அதிகரித்தது. இதைப் பயன்படுத்தி பஞ்சு விலை மேலும் கூடும் என்று யூக வணிகர்கள் வதந்தி பரப்பினர்.

பரவும் பயமும் பதற்றமும்

இதை நம்பி பஞ்சு பேல்களை மில்காரர்கள் அதிகளவில் வாங்கத்துவங்கினர். இதேபோல ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மில்கள் அனைத்தும் பஞ்சு பேல்களை சொன்ன விலைக்கு கொள்முதல் செய்ததால் தானாகவே விலை மேலும் எகிறியது. இதைப் பார்த்து ஜின்னிங் மில் உரிமையாளர்கள் பஞ்சு விலையை ஏற்றினர். அதனால் விவசாயிகள் பருத்தி விலையை உயர்த்தினர். பஞ்சு வியாபாரிகள் பதுக்கலை அதிகமாக்கினர். பஞ்சை அதிக விலைக்கு வாங்கியதால் நுால் விலையை மில்காரர்கள் உயர்த்தினர். இது தொடர் நிகழ்வானது.
இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் உலகச் சந்தைக்குத் தரப்படும் விலையில் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்வது சாத்தியமற்றதாகிவிடும். அதனால் பஞ்சு நுால் விலையைக் குறைத்தே ஆக வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்யலாம். ஆனால் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் நுால் ஏற்றுமதியை தடை செய்வது சாத்தியமற்றது. இப்போதுள்ள அசாத்தியமான சூழலை எதிர்கொள்வதற்கு அரசும் தொழில்துறையினரும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயமுள்ளது.
இதில் பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்வது உடனடியாக எடுக்கக்கூடிய நடவடிக்கை. அடுத்ததாக மில்காரர்களும் பயந்து பதற்றமாகி பஞ்சு பேல்களை வாங்கி அடுக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இது யூக வணிகர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இயல்பற்ற நிலை செயற்கையான 'டிமாண்ட்' என்பதை உணர்வது அவசியம்.

இதேபோல 2010ம் ஆண்டில் பஞ்சு விலை ஆறு மாதங்களில் உயர்ந்து ஒரே மாதத்தில் பழைய நிலைக்கு இறங்கியது. எனவே இன்னும் சில மாதங்களில் பஞ்சு விலை மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் ஜவுளித்துறையினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதை விடுத்து விவசாயிகள் மில்காரர்கள் ஆடை தயாரிப்பாளர்கள் என ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டிருந்தால் கையில் இருக்கின்ற வர்த்தக வாய்ப்புகளும் நழுவிப் போய் விடவே வாய்ப்பு அதிகம்.


'யூக வணிகமே விலை உயர்வுக்கு காரணம்'''பஞ்சு விலை 15 நாட்களில் ஒரு கேண்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்வது என்பது யூக வணிகத்தால் மட்டுமே. இதுபோன்ற விலையேற்றங்கள் ஒட்டு மொத்த ஜவுளி உற்பத்தித்துறையின் போட்டித்திறனைப் பாதித்து நமது ஏற்றுமதியின் வளர்ச்சியையும் தடுத்து விடும். உள்நாட்டு சந்தையிலும் நுகர்வு குறைந்து இதன் தாக்கம் எதிரொலிக்கும். அடிப்படையான டிமாண்ட் உயராமல் யூக வணிகத்தின் அடிப்படையில் விலை உயரும் எந்தவொரு மூலப்பொருளும் அதன் தொடர்ச்சியாக விலை வீழ்ச்சியை சந்திக்கும். பருத்தியும் அதற்கு விதி விலக்கல்ல. யூக வணிகத்தின் போக்கு மாறும்போது விலை குறையும்பட்சத்தில் இருப்பு வைத்திருக்கும் பொருட்களுக்கு நஷ்டம் ஏற்படும். தொழில் துறையினர் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய நேரம் இது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பஞ்சுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை உடனடியாக நீக்கினால் யூக வணிகத்தின் தாக்கம் குறைந்து பஞ்சு விலை இந்தியாவில் குறையும்.''
-பிரபு தாமோதரன், கன்வீனர் இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.).


'பதுக்கிய பஞ்சு வெளியே வரவேண்டும்'''மாதம் தோறும் உயரும் நுால் விலையால் வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து பெற்ற ஆர்டர்களுக்கு ஆடை தயாரிக்க முடியாமல் திருப்பூர் உள்பட நாடுமுழுவதும் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் திணறுகின்றன. பஞ்சு விலை உயர்வை சாதகமாக பயன்படுத்தி நுாற்பாலைகள் நுால் விலையை அபரிமிதமாக உயர்த்தியுள்ளன. இரு மாதங்களில் கிலோவுக்கு 80 ரூபாய் நுால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பருத்தி விலை கேண்டிக்கு ஆயிரம் ரூபாய் உயரும்போது நுால் விலை கிலோவுக்கு 4 ரூபாய் உயரும். இதுவே நுாற்பாலைகளின் வழக்கமான விலை நிர்ணய கோட்பாடு. கடந்த அக்டோபரில் 67 ஆயிரமாக இருந்த பஞ்சு விலை தற்போது 74 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதனால் கிலோவுக்கு 28 ரூபாய் மட்டுமே நுால் விலை உயர்த்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால் கிலோவுக்கு 42 ரூபாய் அதிகமாகியுள்ளது.நுாற்பாலைகள் கிலோவுக்கு 40 ரூபாய் நுால் விலையை குறைக்கவேண்டும். அல்லாதபட்சத்தில் மத்திய அரசு நுால் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். அதிக விலையை எதிர்பார்த்து வியாபாரிகள் பஞ்சு பதுக்கியுள்ளனர். அந்த பஞ்சு ஜவுளித்துறையினருக்கு கிடைக்கச் செய்யவேண்டும்.''
- சக்திவேல்ஏ.இ.பி.சி. தலைவர்.


'வரியை ரத்து செய்வதே தீர்வு'நம் நாட்டில் பருத்தி பயிரிடும் பரப்பு விளைச்சல் குறைந்துவிட்டது. இந்தியாவிலுள்ள வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் தொடர் முயற்சி எடுத்து பருத்தி பயிரிடும் பரப்பை அதிகப்படுத்த வேண்டும். பல நாடுகள் நமக்கு பஞ்சு இறக்குமதி செய்யத் தயாராகவுள்ளன. ஆனால் மத்திய அரசு 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது. இதை ரத்து செய்தாலே போதும்.
வெளிநாட்டுப் பருத்தி வருவதால் உள்நாட்டுப் பருத்திக்கு விலை குறைந்துவிடும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஆனால் இரண்டின் தரம் வெவ்வேறாக உள்ளது. வேறு வழியின்றிதான் வெளிநாட்டிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்கிறோம். பஞ்சு ஒரு கேண்டி 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. இதனால் நுால் விலையும் உயர்ந்துள்ளது. பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்வதே உடனடித் தீர்வு.
- ரவி சாம்தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தலைவர்.

'நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்'

''ஜவுளித்துறையின் முதல்நிலையில் பருத்தி விவசாயிகளும் கடைசி நிலையில் ஆடை உற்பத்தியாளர்களும் உள்ளனர். பஞ்சுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் விவசாயிகளுக்கு அரசு பாதுகாப்பு அளித்துள்ளது. ஆனால் அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் ஆடை உற்பத்தி துறை எவ்வித பாதுகாப்புமின்றி பயணித்துவருகிறது.
நமது நாட்டின் ஒரு மாநில அளவே உள்ள வங்கதேசம் நம்மிடமிருந்து பஞ்சு நுாலை வாங்கி உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆடை வர்த்தகத்தை வசப்படுத்திவைத்துள்ளது. அந்நாட்டு அரசு அத்துறைக்கு தரும் முக்கியத்துவமே இதற்குக் காரணம்.ஆண்டுதோறும் பஞ்சு நுால் விலை அபரிமிதமாக உயர்ந்து ஆடை உற்பத்தி துறையை மிரட்டுகின்றன. பஞ்சு நுால் விலை ஏற்றத்தால் குறு சிறு நடுத்தர ஆடை உற்பத்தி நிறுவனங்களின் மூலப்பொருள் வாங்கும் திறன் குறைந்துள்ளது. அதனால் நிறுவனங்களின் ஆடை வர்த்தகம் 50 சதவீதத்துக்கும் கீழ் குறையும் நிலை உருவாகியுள்ளது. ஜவுளித்துறைக்கு சம்பந்தமில்லாத யூக வணிகர்கள் பஞ்சு விலையை உயர்த்தி விளையாடுகின்றனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் பஞ்சு விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர். அதனால் மூலப்பொருளான பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். மத்திய அரச பஞ்சு மீதான இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அதேபோல் நுால் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது தடை விதிக்கவேண்டும்.''
- ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர்-.

ஓராண்டில் 24 லட்சம் கதிர்கள் அதிகமாகும்

இந்தியாவில் 3000க்கும் அதிகமான மில்கள் இருக்கின்றன. இவற்றில் 40 சதவீத மில்கள் தமிழகத்தில் உள்ளன. மொத்தத்தில் தற்போது 5 கோடி கதிர்கள் இயங்குகின்றன. ஜவுளித்துறையின் வளர்ச்சியைக் கணக்கிட்டு மாதத்துக்கு இரண்டு லட்சம் கதிர்கள் அதிகமாகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 24 லட்சம் கதிர்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக வரும் காலத்தில் பஞ்சின் தேவையும் நுாலின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்ப பருத்தி பயிரிடும் பரப்பும் அதிகமாகும். இந்த ஆண்டில் பருத்தி விவசாயிகளுக்குக் கிடைத்த விலையைப் பார்த்து ஆந்திராவில் இப்போதே பருத்தியைப் பயிரிட பல லட்சம் விவசாயிகள் தயாராகி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு பருத்தி விளைச்சல் இரட்டிப்பாகும். பஞ்சு விலை குறையும்.
பழைய வரலாற்றைப் பார்த்தால் எப்போது பஞ்சு விலை ஏறினாலும் ஏதோ ஒரு காரணத்தால் அப்படியே வீழ்ச்சியடைவதே வழக்கமாக இருந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் மாறும். பருத்தி விளைச்சல் அதிகமாகும். 2010ல் ஜவுளித்துறை இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பைச் சந்தித்தது. அப்போது 35 ஆயிரமாக இருந்த பஞ்சு விலை 66 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து மீண்டும் பழைய விலைக்கு வந்தது.அதனால் பஞ்சு விலையைப் பற்றி கவலைப்படாமல் தொழிற்சாலைகளை நவீனமயமாக்குவது ஒருங்கிணைந்த பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கும் முயற்சிகளில் ஆடை தயாரிப்பாளர்கள் இறங்குவது அவசியம். -நமது நிருபர் குழு-

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X