சென்னை பழவந்தாங்கலில் நடந்த, 'இஸ்பாகான்' அமைப்பின் 14வது மாநாட்டை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: புத்தாக்க மற்றும் புத்தொழில் முயற்சிகளில், சில ஆண்டுகளாக தொய்வு இருந்தது. அதை மாற்றி, மிக விரைவில் தமிழகத்தை உலகின் முன்னணி புத்தொழில் தளமாக மாற்றும் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்.குறிப்பிட்ட சில தொழில்களிலேயே நம் வளர்ச்சி அடங்கி இருக்கிறது.
புதிய தொழில்கள் நோக்கியும், நம் எண்ணங்கள் செல்ல வேண்டும். உலகெங்கும் நான்காம் தொழிற்புரட்சி துவங்கி விட்டது. செயற்கை நுண்ணறிவும், வேறு பல புதிய உற்பத்தி முறைகளும், எல்லாத் துறைகளிலும் மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றன.தமிழகத்தில் ஆயிரக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் உருவாக வேண்டும்.
அவை உள்ளூர் சந்தையிலும், உலகச் சந்தையிலும் வெற்றி பெற வேண்டும். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தாக வேண்டும். இதுதான் நாம் காண வேண்டிய வளர்ச்சி. புதிய நுாற்றாண்டின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும், புதிய தொழில்களை உருவாக்கவும், அரசு நிச்சயமாக துணை நிற்கும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
ரேஷன் கடைகளில் முதல்வர் திடீர் ஆய்வு
இந்தாண்டு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு, ஜன., 4 முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.அவ்வாறு வழங்கப்படும் பரிசு தொகுப்பில், தரம் இல்லாத பொருட்கள் வழங்கப்பட்டதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின்,ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்தி வருகிறார்.
அந்த வகையில், சென்னை ராயபுரம் மசூதி தெரு, மீனாட்சியம்மன் பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, விஜயராகவலு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். பொதுமக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
ராயபுரம் மசூதி தெருவில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு முடித்து செல்லும் போது, அங்கிருந்த பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறினார். அங்கு முக கவசம் அணியாமல் வந்தவரை அழைத்து, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவருக்கு முக கவசம் அணிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE