புதுடில்லி : பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக டில்லியைச் சேர்ந்த சில மூத்த வழக்கறிஞர்களின் மொபைல் போன்களுக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து 'சீக்கியருக்கு நீதி' என்ற அமைப்பில் இருந்து அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாசகங்கள் அந்த அழைப்பில் ஒலிபரப்பப்பட்டன.
'பிரதமரின் பயணத்தில் தடை ஏற்படுத்தியது நாங்கள் தான். அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். 1984ல் சீக்கியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யாருக்கும் தண்டனை அளிக்காத உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரிக்கக் கூடாது' என, பதிவு செய்யப்பட்ட வாசகங்களில் கூறப்பட்டுள்ளது.

பிரதமரின் பயணத்தின் போது உள்ளூர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதற்கு வெளிநாட்டைச் சேர்ந்த அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.

'பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகள் அமைத்துள்ள விசாரணை குழுக்கள் கலைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE