ஸ்ரீபெரும்புதுார்-படப்பை அருகே, பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி, வழிபாட்டில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலை, வருவாய் துறையினர் இடித்து அகற்றியதால், பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த வரதராஜபுரத்தில் தனியார் நிர்வகிக்கும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில், அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக கூறி, கோவிலை இடிப்பதாக, வருவாய் மற்றும் நீர்வளஆதாரத் துறையினர், 'நோட்டீஸ்' வழங்கினர்.அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள், வழிபாட்டில் உள்ள கோவிலை இடிக்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தனர்.டிச., 19ல், அதிகாரிகள், கோவிலை இடிக்க வந்தனர்.

அங்கிருந்த பக்தர்கள், கோவிலுக்குள் அமர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர், கோபுரத்தின் உச்சிக்கே சென்று, 'கோவிலை இடிக்கக்கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகரிகள், கோவிலை இடிக்காமல் திரும்பி சென்றனர். பக்தர்கள் சார்பில் பல போராட்டங்களும், அரசுக்கு கோரிக்கை மனுக்களும் அனுப்பினர்.
இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்த வருவாய் துறையினர், பக்தர்கள் எதிர்ப்பையும் மீறி, நேற்று கோவிலை இடித்தனர்.பொக்லைன், ஜே.சி.பி., இயந்திரங்கள் வைத்து கோவிலை இடித்தபோது, விழுந்த கோபுரத்தை பார்த்து, 'ராமா... ராமா...' என, பக்தர்கள் கதறி அழுதனர்.வழிபாட்டில் இருந்த கோவிலை, அதிகாரிகள் இடித்து தள்ளியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE