சேலம்: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்ததாகவும், அதிமுக ஆக்கி வைத்த சோற்றை திமுக சாப்பிடுவதாகவும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சேலம், ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. அளவு குறைவான பொருள்கள், பொங்கல் பை இல்லாத அவலம், தரமற்ற பொருள் வழங்கியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன்மூலம் திமுக 30 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டு உள்ளது.
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆக்கி வைத்த சோற்றை திமுக சாப்பிடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் வடகிழக்கு பருவமழையை ஸ்டாலின் முறைப்படி ஆய்வு செய்யாத காரணத்தினால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜெட் வேகத்தில் கொரோனா நோய் பரவுவதாக சுகாதாரத்துறை அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.