சண்டிகர்: பஞ்சாபில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பெரோஸ்பூர் கூட்டத்தில் அரசியல் கட்சியினர், காவல்துறையினருடன் இணைந்து கொண்டு, கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களையும், பிரதமரையும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த ஜன.,5ம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் சுமார் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது. பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், ‛பிரதமரின் வழியில் போராட்டம் நடைபெற்றது எங்களுக்கு தெரியாது. பிரதமருக்கு எவ்வித பாதுகாப்புக் குறைபாடும் ஏற்படவில்லை. பிரதமர் பங்கேற்க இருந்த பெரோஸ்பூர் கூட்டத்தில் 70 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருக்கிறது, ஆனால் 700 பேர் மட்டுமே வந்துள்ளனர். இதனால், நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கக்கூடும்' என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குற்றச்சாட்டை மறுத்தார்.
இந்நிலையில் பஞ்சாபில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங், ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கஜேந்திர சிங் பேசியதாவது: பஞ்சாபில் நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களிலேயே, பெரோஸ்பூர் கூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக அமைந்திருக்கும். ஆனால், அரசியல் கட்சியினர், காவல்துறையினருடன் இணைந்து கொண்டு, கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களை மட்டுமல்ல, பிரதமரைக் கூட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர். இது பா.ஜ., தொண்டர்களை மேலும் பலப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE