உ.பி.,யில் அடுத்த மாதம் 10ம் துவங்கி 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல், கட்சி தாவல் நடவடிக்கைகளும் துவங்கி உள்ளன.
உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுவாமி பிரசாத் மவுரியா அமைச்சர் பதவியில் இருந்து விலகியதுடன், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல், ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாஹர் ஆகியோரும் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவை சார்ந்த மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த சுவாமி பிரசாத் மவுரியா 5 முறை எம்.எல்.ஏ., பதவி வகித்துள்ளார். கடந்த 2016ல் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய அவர், பா.ஜ.,வில் இணைந்தார். மற்ற 3 எம்.எல்.ஏ.,க்களும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பா.ஜ.,வில் இணைந்தவர்கள் தான்.
பா.ஜ.,வில் இருந்து விலகியது குறித்து மவுரியா கூறியதாவது: யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். தாழ்த்தப்பட்டவர்கள், ஓபிசி., பிரிவினர், விவசாயிகள், சிறு தொழிலதிபர்கள் எதிர்ப்பு காரணமாக விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.,வில் இருந்து விலகி உள்ளதால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது தேர்தல் முடிந்த பிறகு தெரியவரும் என தெரிவித்தார். இவர், இன்னும் சில தலைவர்களை பா.ஜ.,வில் இருந்து அழைத்து செல்வார் எனக்கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக அகிலேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமுக நீதி, சமத்துவத்திற்காக போராடிய சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் அவரது ஆதரவாளர்களை வரவேற்கிறேன். சமூக நீதியில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். 2022ல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
பா.ஜ., வை சேர்ந்த துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியதாவது: சுவாமி பிரசாத் மவுரியா ஏன் விலகினார் என்பது தெரியவில்லை. பதவி விலக வேண்டாம். பேசி பிரச்னைகளை தீர்த்து கொள்ளலாம். அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE