வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி: வள்ளலார் கூறியது போல், 'தனித்திரு, விழித்திரு' என்ற கொள்கையை பின்பற்றினால், தமிழகத்தில் முழு ஊரடங்கை மட்டுமின்றி, கொரோனா பரவலையும் தடுக்கலாம்.'தனித்திரு' கொள்கையை, முதலில் ஆளும் கட்சியினரும், அவர்களுக்கு, 'ஆமாம் சாமி' போடும் கட்சியினரும் தான் பின்பற்ற வேண்டும்!
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: அகில இந்திய மருத்துவ முதுநிலை கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் கோரிக்கை, உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது. உண்மையில் இது, பெரிய சமூக நீதி வெற்றியாகும்.நீங்கள், இதைவிட உயரிய வார்த்தைகளை பயன்படுத்தி, ஸ்டாலினை வாழ்த்தி அறிக்கை அளித்தாலும், அதன் உள்ளர்த்தத்தை, தி.மு.க.,வினரும், பிற கட்சியினரும் நன்கு அறிவர்!
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேச்சு: தமிழக அரசின், 'மஞ்சள் பை' திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் ஓராண்டுக்குள், பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, பிளாஸ்டிக் இல்லாத தமிழகமாக மாறும். மஞ்சள் பை திட்டத்தை மற்ற மாநிலங்களும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றன.அடேங்கப்பா... மஞ்சள் பையில் இவ்வளவு மகத்துவம் இருக்கிறதா... மஞ்சள் பையின் மகத்துவம் பிற மாநிலங்களுக்கும் பரவி விட்டதா... படிப்படியாக இந்தியா முழுமைக்கும் பரவி, உலகிற்கே முன்னுதாரணமாக மாறிவிடும் போலிருக்கிறதே!
பா.ஜ., மருத்துவரணி மாநில தலைவர் விஜயபாண்டியன் பேட்டி: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக, 'நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட போராட்டம் நடத்துவோம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது மக்களை ஏமாற்றும் செயல்.மக்களை ஏமாற்றலாம்; மாணவர்கள் ஏமாறவில்லை. 2021 நீட் தேர்வை தமிழக மாணவர்கள் ஏராளமானோர் எழுதினர். இப்போது, 2022 தேர்வுக்காக மும்முரமாக படித்து வருகின்றனர்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அறிக்கை: 2021ல் உலகம் முழுதும் உணவு பொருட்களின் விலை, 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தானியங்கள் 27 சதவீதம், கோதுமை 31, மாமிசம் 12.7 சதவீதம் உயர்ந்ததாக, ஐ.நா., சபையின் துணை அமைப்பு தெரிவித்துள்ளது.நல்லவேளை... இதற்கும் பிரதமர் மோடி தான் காரணம் என சொல்லாமல் விட்டீர்களே!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: 1 படி அரிசி, 1 கிலோ சர்க்கரையை கூட சுயமாக வாங்க முடியாத நிலையில் தான் தமிழக மக்கள் இருக்கின்றனரோ என்ற சந்தேகம், தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் தொகுப்பு பொருட்களால் எழுகிறது.அந்த பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களையும், மூத்த அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும், வாரி வழங்குவதை பார்க்கும் போது, தமிழகம் வறிய நிலையில் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE