அரசு மருத்துவமனையில் ஆட்டம் போடும் டாக்டர்!
''நேர்ல குடுக்கிற விண்ணப்பங்களை குப்பை கூடையில போட்டுருதாங்கல்லா...'' என்ற ஆதங்கத்துடன் பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., அலுவலக கட்டுப்பாட்டுல பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகள் வருது... அதிகமான ஏரியாங்கிறதால, இந்த ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல கூட்டம் கட்டியேறுது...
''இதனால புரோக்கர்களும் நிரம்பி வழியுதாவ வே... லைசென்ஸ் பதிவு, புதுப்பிப்பு, தரச்சான்று, பெயர் மாற்றம்னு எல்லா வேலைகளையும் நாங்க செஞ்சு தர்றோம்னு சொல்லி, பொதுமக்களிடம் விண்ணப்பத்துடன், தட்சணையும் கேட்டு வாங்கிடுதாவ...
''தப்பி தவறி, சில நேர்மை சிகாமணிகள், அதிகாரிகள் டேபிளுக்கு போய் விண்ணப்பத்தை குடுத்தா, அற்ப புழு மாதிரி பார்த்துட்டு, ஏதாவது நொள்ளை காரணத்தை சொல்லி 'ரிஜெக்ட்' செஞ்சிடுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''ஆளுங்கட்சி முக்கிய புள்ளிக்கு ஆகாதவரை துாக்கி அடிச்சுட்டா ஓய்...'' என, அடுத்த மேட்டரை கையில் எடுத்தார், குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணி நுால் துறை உதவி இயக்குனரா இருந்தவர் ரவிகுமார்... இலவச வேஷ்டி - சேலை, பள்ளி சீருடை துணிகளை 60 - 70 சதவீதம், ஈரோடு மாவட்டத்துல தான் நெசவு செய்யறா ஓய்...
''இதுபோன்ற ஆர்டர்களை, அரசு அனுமதி பெற்ற சங்கத்தின் கீழ் உள்ள விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு மட்டுமே தரணும்கறது விதி...
''ஆனா, இவாளால குறிப்பிட்ட காலத்துக்குள்ள இப்பணியை முடிக்க முடியாதுங்கறதால, சிறிய, பெரிய நெசவாளர்களிடம் ஆர்டரை குடுத்து, சங்கக் கணக்குல காட்டி பணியை முடிப்பா ஓய்...
''இந்த வகையில, வருஷத்துக்கு பல கோடி ரூபாய் இந்த துறையில புழங்கும்... இந்த ஆர்டர் குடுக்கறதுலயும், சங்க தேர்தலை தன்னிச்சையா உதவி இயக்குனர் அறிவிச்சதுலயும், மாவட்ட ஆளுங்கட்சி முக்கிய புள்ளிக்கும், ரவிகுமாருக்கும் ஒத்துப்போகலை...
''இதனால, ரவிகுமாரை திருச்சிக்கு மாத்திட்டா...
''இந்த இடத்துக்கு வர பல லட்சம் ரூபாய் 'முதல்' போட்டு காத்துண்டு இருந்தவருக்கு போன வாரம் 'ஜாக்பாட்' அடிச்சுடுத்து... அவரும், முக்கிய புள்ளியை பார்த்து ஆசி வாங்கிண்டு, 'டியூட்டி'யில 'ஜாயின்' பண்ணிட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''சரவணனுக்கும், முத்துசாமிக்கும் பெரும்பாலும் பிரச்னை வராதுப்பா...'' என, மொபைல் போனில் பேசியபடியே வந்த அன்வர்பாய், ''ஓவரா ஆட்டம் போடுறாரு பா...'' என, கடைசி தகவலை சொல்ல ஆரம்பித்தார்...
''திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி முக்கிய அதிகாரி, அலுவலக பணிகளை மேலாண்மை செய்ய, உதவி நிர்வாக அலுவலரா ஒருவரை நியமிச்சிருக்கார்... இவர், அதிகாரி கூட மருத்துவக் கல்லுாரியில ஒண்ணா படிச்சவராம் பா...
''ஆனா, அவரோ, சக டாக்டர்கள், பணியாளர்களை மிரட்டுறாரு... ஜூனியர் டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர், சீனியர் ஊழியர்கள் சிலரை ஒருமையில தான் அழைக்கிறாரு பா...
''அதோட, 'எதுவா இருந்தாலும், லீவு எடுத்தாலும் என்னிடம் சொல்லுங்க... இல்லாட்டி டீன் அறைக்கு அனுப்பிடுவேன்... அவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டி வரும்'னு மிரட்டுறாரு பா...
''இது பத்தி முக்கிய அதிகாரியிடம் சொன்னா, 'அவர் சொல்றதை நீங்க செய்யுங்க'ன்னு ஒரு வார்த்தையோட முடிச்சுக்கிறாரு பா...'' என்றார் அன்வர்பாய்.பெரியவர்கள் கிளம்ப, அடுத்து பெஞ்சில் அமர்ந்த முருகேசன், செந்தில்குமாரை கவனிக்க நாயர் எழுந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE