வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில் பரவும் கொரோனா தொற்று, ஒமைக்ரான் வகையை சார்ந்ததா என்பதைகண்டறிவதற்கான, மரபணு பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தினமும் பாதிக்கப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு, ஒமைக்ரான் அறிகுறிகளே இருப்பதாலும், இதற்கான பரிசோதனை முடிவுகள் வந்து சேருவதற்குள், அவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விடுவதாலும், ஒமைக்ரானுக்கான மரபணு சோதனை தேவையில்லை என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது.
தமிழகத்தில் 2021 டிசம்பர் 25ம் தேதி வரை, 'டெல்டா' வகை கொரோனா வைரஸ் தாக்கம் தான் இருந்தது. இதனால், தினசரி பாதிப்பும் 600 என்ற எண்ணிக்கையிலேயே நீடித்தது. பின், நைஜீரியாவில் இருந்து வந்த நபர் மற்றும் அவருடன் பயணித்த நபர்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர்.
சமூக பரவல்
அதன்பின், அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு, உருமாறிய ஒமைக்ரான் வகை உறுதி செய்யப்பட்டது. இவர்கள் வாயிலாக, பலருக்கு கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து, ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் சமூக பரவலாக மாறியது.அதனால், படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இரட்டிப்பு வேகத்தில் பரவ துவங்கியது. தற்போது தினமும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதில், 85 சதவீதம் பேர் ஒமைக்ரான் வகை வைரசாலும், 15 சதவீதம் பேர் டெல்டா வகை வைரசாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சென்னை திருவான்மியூர், பாலகிருஷ்ணா சாலையில் உள்ள தென்றல் அடுக்குமாடி குடியிருப்பில், 10க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் உள்ளனர். அவர்களுக்கு ஆக்சிஜன்அளவை சரிபார்த்து கொள்ள, 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' உபகரணங்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். மேலும், முக கவசங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்தையும் ஆய்வு செய்தார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் அளவு, 92க்கு கீழ் இருக்கும்பட்சத்தில் மட்டுமே, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தரப்படும். அதற்கு மேல் ஆக்சிஜன் அளவு இருக்கும் நபர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். சென்னையில் தினசரி 6,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 987 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
'
கிளஸ்டர்
'
அவர்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்க, 200 வார்டுகளிலும், கொரோனா களப்பணியாளர்கள், டாக்டர்கள், மருத்துவ குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மூச்சுத் திணறல் உட்பட இதர பாதிப்புள்ள நபர்களுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது ஏற்படும் கொரோனா தொற்றில், 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்றும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா வகை தொற்றும் ஏற்படுகிறது.
ஒமைக்ரான் தொற்றை உறுதி செய்ய, மத்திய ஆய்வகத்திற்கு மாதிரிகள்அனுப்பப்பட்டு, மரபணு சோதனை முடிந்து, முடிவுகள் வருவதற்குள், நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடுகின்றனர். எனவே, ஒமைக்ரானை உறுதி செய்யும் மரபணு பரிசோதனையை நிறுத்தி விட்டோம்.அதேவேளையில், 'கிளஸ்டர்' எனப்படும், ஒரே பகுதியில் அதிகம் பாதிப்பு காணப்படும் இடங்களில் மட்டுமே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும். அப்போது தான், வேறு ஏதேனும் மாறுபட்ட தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும்.
'பூஸ்டர்' தடுப்பூசிக்கு தகுதி உடையவர்கள் எண்ணிக்கை, இம்மாத இறுதிக்குள், 10 லட்சமாக உயர்த்தப்படும். இந்தியாவில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு 1.50 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும், 22.50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு, 90 சதவீத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.தொற்று பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
பொங்கல் பண்டிகைக்கு பின், முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை. பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால், எதிர்காலத்தில் ஊரடங்கை நீட்டிக்கவும், கடுமையாக்கவும் அவசியம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.