வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என்னால் முடிந்ததைச் செய்கிறேன்' என்று சொல்பவன், உத்தமன்; முடியாது என்று தெரிந்த பின்னும், 'செய்து விடுவேன்' என்று வாக்குறுதி கொடுப்பவன், ஏமாற்றுக்காரன்! மருத்துவப் படிப்பிற்கான நுழைவு தேர்வான, 'நீட்' குறித்து உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னும், முடிந்து போன அந்த சமாச்சாரத்தை கையில் எடுத்துள்ளது, தி.மு.க., அரசு.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, நீட் தேர்வு அச்சத்தால் அரங்கேறிய தற்கொலை விவகாரத்தை, சட்டசபை தேர்தலுக்கு வியூகமாகப் பயன்படுத்தியது. 'ஆட்சிக்கு வந்தவுடன் நான் போடும் முதல் கையெழுத்து, நீட் ரத்து என்பது தான்' என, தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முழங்கினார். அவரது மகன் உதயநிதியும், தற்கொலை செய்த மாணவ - மாணவியர் இல்லத்துக்கு விரைந்தோடிச் சென்று, 'நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம்' என்று பிரசாரம் செய்தார்.

'நீட் ரத்து' என்பது நடக்காத காரியம் என தெரிந்தும், இவர்கள் அரசியல் நாடகம் நடத்தினர். தந்தையும், மகனும் சொன்ன பொய்யை, அப்பாவி மக்கள் நிஜம் என்று நம்பி ஏமாந்தனர். ஆட்சிக்கு வந்த பின், ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்ற மனப்போக்கு. அதே போல, இன்று ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் ஆவேசப் பேச்சு, 'முயற்சி செய்கிறோம்' என்ற கண்ணாமூச்சி ஆட்டம், போராட்டம், தீர்மானம், அனைத்துக் கட்சியினர் கூட்டம் என, 'பயாஸ்கோப்பு' காட்டுகின்றனர்.
வழக்கறிஞர் நளினி சிதம்பரம், 'நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். முதல்வர் ஸ்டாலினுக்கும் இது நன்றாகத் தெரியும். முடியாத காரியத்துக்கு முயற்சி ஏன்? இந்த கபட நாடகத்தை விடுத்து, மாணவர்கள் அனைவருக்கும் நீட் தேர்வு பயிற்சி வழங்குங்கள். அதை விடுத்து, 'சமூக நீதி அது, இது' என்று வீணாக கத்திக் கொண்டிருந்தால், மாணவர்களுக்கு கால் காசு பிரயோஜனமில்லை. இப்போது ஒன்றும் குடி முழுகவில்லை. மாணவர்களிடம் எதார்த்தத்தை விளக்கிச் சொல்லுங்கள்; ஒன்றும் கெட்டு விடாது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE