வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பிராமணர்கள், தேசியவாதிகள் குறித்து உ.பி., முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்த கருத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் 403 சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் பிப்.,10 தொடங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அடுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தா அல்லது அகிலேஷா என்று மக்கள் தீர்ப்பளிக்க இருக்கிறார்கள். மேலும், இன்னும் 2 ஆண்டுகளில் வர உள்ள பார்லிமென்ட் தேர்தலில் யார் கை ஓங்கி இருக்கும் என்பதையும் இம்மிகப்பெரிய மாநிலத்தின் வெற்றியை வைத்து கணிக்க முடியும்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 'தற்போதைய தேர்தல் 80க்கும் 20க்கும் போட்டியாகியுள்ளது. தேசியம், நல்லாட்சி, மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவான 80 சதவீத வாக்காளர்கள் பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை அழுத்துவார்கள். தேசியவாதம், விவசாயிகள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிரானவர்கள், மாபியாக்கள், குற்றவாளிகளின் ஆதரவாளர்கள், ஊழல்வாதிகள், தேசவிரோதிகளை ஆதரிக்கும் 15 முதல் 20 சதவீத மக்கள் வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்தலில் பிராமணர்கள் தலைமையை முடிவு செய்வார்கள். இங்கு பிராமணர்கள் என்பது சாதியைக் குறிக்காது. கற்றறிந்த சமூகத்தைச் சொன்னேன்' என்றார்.

இது குறித்து ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து: ஆதித்யநாத் அகராதியில் பிராமணர்கள் என்றால் சாதி கிடையாது, அது கற்றறிந்த சமூகம். மேலும் உ.பி.,யில் 80 சதவீத வாக்காளர்கள் தேசியவாதிகள், 20 சதவீத வாக்காளர்கள் தேச விரோதிகள். இங்கு தற்செயலான விஷயம் என்னவென்றால், உ.பி., மக்கள் தொகையில் 19.26 சதவீத மக்கள் முஸ்லிம்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE