வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பஞ்சாப்: பிரதமர் பஞ்சாப் சென்றிருந்தபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜன.,5ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பஞ்சாப் சென்றிருந்தபோது, பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் சுமார் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது. பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாக விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் தனியாக குழு அமைத்தது. பஞ்சாப் மாநில அரசும் தனியாக விசாரணை குழுவை அமைத்தது.
மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ‛மத்திய மற்றும் மாநில அரசுகளின் விசாரணைக் குழுக்கள் இந்த வழக்கில் விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் நாங்களே ஒரு விசாரணை குழுவை அமைக்கிறோம்,' என தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் தரப்பில் இன்று (ஜன.,12) வெளியான அறிவிப்பில், ‛பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா செயல்படுவார். குழுவின் உறுப்பினர்களாக பஞ்சாப் காவல்துறை தலைவர் (பாதுகாப்பு), தேசிய புலனாய்வு முகமை இயக்குநர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் இடம் பெறுவர்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE