வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தமிழ் மொழி சிறப்புக்கு திருக்குறளே உதாரணம் என 11 மருத்துவக்கல்லூரி மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடம் திறப்பு விழாவில் ஆன்லைனில் பங்கேற்ற பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 11 மருத்துவ கல்லூரி துவக்க விழா மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடம் திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்வு கொள்கிறேன். மருத்துவ படிப்புகளை மேம்படுத்த கடந்தகால அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, அப்போது 317 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. தற்போது 597 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 53 சதவீதம் அதிகரித்துள்ளது. 22 எய்ம்ஸ் மருத்துவ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரம் மருத்துவ மையங்கள் நாட்டில் உள்ளன. நமது மருத்துவ துறையின் வளர்ச்சியை உலகமே எதிர்பார்க்கிறது. வரும் 5 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரி மேம்பாட்டிற்கென தமிழகத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ் மொழியை பொறுத்தவரையில் இது மிக தொன்மையானது. இதன் மதிப்பை கண்டு நான் ஆச்சரியம் அடைந்துள்ளேன். தமிழ் மொழி எவ்வளவு சிறப்பானது என்பதற்கு திருக்குறளே உதாரணம். இந்த திருக்குறளின் பெருமை அறிந்து குஜராத் மொழி உள்ளிட்ட பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத் மக்கள் அறிந்து கொள்வர். பள்ளிக்கல்வியை ஆரம்பத்தில் தமிழில் படிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். திறமை வாய்ந்த தமிழர்களை நான் வரவேற்கிறேன்.

நாம் மற்ற கலாசாரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். கோவிட் தொற்று காலமான இந்நேரத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோவிட் விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். இந்தியாவில் சில நாட்களில் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் ஊசி போட்டு வருகிறோம். நாட்டு முன்னேற்றத்திற்கு, 130 கோடி மக்கள் நலனுக்காக அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.
ஒரு மாநிலத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பது இதுவே முதன் முறை. இதற்கு முன் உபி.,யில் 9 மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். மருத்துவ கல்லூரி மிக முக்கியமானதாகும். மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை சமீபத்திய கோவிட் தொற்று நமக்கு பாடம் அளித்துள்ளது. ஆயுஸ்மான் மருத்துவ திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பெரும் அளவில் பயன்பெறுகின்றனர். மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன் பெற்றுள்ளனர். இந்தியாவில் தரமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதற்கென மத்திய அரசு முனைந்து செயல்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து
பேச்சை துவக்கியதும் பிரதமர் மோடி தமிழில் வணக்கம் தெரிவித்து , தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டார். பேச்சை முடிக்கும் போதும் நன்றி வணக்கம் என தமிழில் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE