அழகிரியின் புஜ பல பராக்கிரமம்!
க.ரவி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக அமைச்சரவையின் அறிவுரை படி தான், கவர்னர் செயல்பட வேண்டும். அதற்கு புறம்பாக செயல்பட்டால், விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்' என்று ஆவேசம் காட்டி எகிறி குதித்து இருக்கிறார், காங்., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி.
என்னய்யா இது அக்கிரமமாக இருக்கிறது?அரசு அனுப்பும் அத்தனை கோப்புகளிலும், கவர்னர் கண்ணை மூடியபடியே கையொப்பம் போட வேண்டுமா?அப்படி செய்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு, 'கவர்னர் பதவி என்பது என்ன 'ரப்பர் ஸ்டாம்ப்' பதவியா... அரசு அனுப்பும் கோப்புகளை, அவர் ஆராய்ந்து பார்க்க மாட்டாரா?' என்று துள்ளி துள்ளி குதிக்கும்.
தமிழக காங்., தலைவர் அழகிரி, 'கவர்னர் சுயமாக சிந்திக்க முற்பட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுக்கிறார்; என்ன கொடுமை இது!'அசுர பலம்' உடைய அழகிரி என்ன நடவடிக்கை எடுத்து கவர்னரை திக்கு முக்காடச் செய்வார் என்பதை காண, தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
காட்டுங்கள் அழகிரி, உங்கள் புஜ பல பராக்கிரமத்தை!
முதல்வருக்கு நேரம் இருக்கிறதா?
என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நெல்லையில், 'சாப்டர்' சி.எஸ்.ஐ., பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து, மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். உடனே, தலைமை ஆசிரியை ஞானசெல்வி, தாளாளர் செல்வகுமார், ஒப்பந்தக்காரர் ஜான் கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அப்பள்ளி ஆசிரியர்கள் பலர், சொந்தமாக கார் வைத்திருந்தும், காயமுற்ற மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்து விட்டனராம்; இவர்களை, அந்த இயேசு மன்னிப்பாரா?கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும், 'அதிமேதாவி'யின் செயல் போல, தமிழகம் முழுதும் உள்ள ஓட்டை, உடைசல் பள்ளிக் கட்டடங்களை கண்டுபிடித்து ஆய்வு நடத்தும்படி உத்தரவு போட்டு, பள்ளிக்கல்வித் துறை தம் கடமையை நிறைவேற்றி விட்டது.
முதல்வர் ஸ்டாலின், பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு தலா, 10 லட்சம் ரூபாயும்; காயமடைந்த மாணவர்களுக்கு தலா, 3 லட்சம் ரூபாயும் நஷ்டஈடாக அளித்து, இரங்கல் செய்தி வெளியிட்டு விட்டார்.சுவர் இடிந்து விழுவது ஒன்றும், இந்தப் பள்ளிக்கு புதிதல்ல என்கின்றனர். 2014ல், சுவர் இடிந்து, மாணவர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர்.பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, பா.ஜ., மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது; பிற கட்சிகளோ, தி.மு.க.,வுக்கு பயந்து, ஒளிந்து
கொண்டன.ஹிந்து நடத்தும் பள்ளியில், இப்படி ஒரு விபத்து நடந்திருந்தால் திருமாவளவன், வைகோ, முத்தரசன் போன்ற அரசியல்வாதிகள் பொங்கி எழுந்திருப்பர். கல்வி நிலையத்தில் பேதம் இல்லை. தி.மு.க., அரசோ, குற்றம் நடந்தால், மதம் பார்த்து தான் நடவடிக்கை எடுக்கிறது!சிறுபான்மையினர் நடத்தும் பள்ளியில் நடக்கும் அவலங்களை, 'தில்லுமுல்லு'களை, ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை.
இந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, ஆளுங்கட்சியினர் வேறு ஏதாவது ஒரு காரியத்தை செய்வர்; ஊடகங்களும் அதை பற்றி பேசும்; மக்களும் மறந்து விடுவர்.இதோ பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இனி மக்கள், அதை பற்றியே பேசுவர். பள்ளி கட்டடம் இடிந்து மாணவர்கள் பலியான சம்பவத்தை, பலரும் மறந்து விட்டனர்.
தி.மு.க., அரசுக்கு, விளம்பரம் தேடுவதற்கே நிறைய நேரம் செலவாகிறது. இதில் மக்கள் பிரச்னை எப்படி தெரியும்?சிலை, மணிமண்டபம் என ஒன்றுக்கும் உதவாத காரியத்தில் அக்கறை காட்டும் முதல்வர் ஸ்டாலின், பள்ளிகளை கொஞ்சம் கவனித்தால் புண்ணியமாகப் போகும்!
குழந்தைகளை பாதுகாப்போம்!
க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை கேளம்பாக்கத்தில் பள்ளி தாளாளர் ஒருவர், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.பொறியியல் மாணவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாங்காட்டில், 17 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.சென்னையில் போலி சாமியார் ஒருவர், தோஷம் நீக்குவதாக, 16 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியுள்ளார்.திருப்பத்துாரில், 30 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.கோவை மாவட்டத்தில் தந்தையே தன், 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்...நாளிதழை திறந்தாலே, ஏதாவது ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி இல்லாமல் இருப்பதில்லை.கடந்த, 2015 ஜனவரி முதல் 2020
டிசம்பர் வரையிலான ஆறு ஆண்டு காலத்தில் மட்டும், 12 ஆயிரத்து 239 'போக்சோ' வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மாநில குற்ற ஆவண காப்பகம் மாவட்ட வாரியாக புள்ளி விபரங்களை தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்த ஆறு ஆண்டுகளில் மொத்தமாக, 1,194 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்படி, 2019ல், 2,396 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; அதில், 286 வழக்குகளில் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காலமான 2020ல் தான், அதிகளவு போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. 3,090 வழக்குகளில், 176ல் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.கொடும் குற்றமாக கருதப்படும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை, விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்; அதற்காக அதிகளவில் நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.போலீசார், விரைவாக விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த உலகத்தின் ஒரே நம்பிக்கை, குழந்தைகள் தான். அவர்களை பாதுகாக்க வேண்டியது, நம் கடமை. அவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணையும், தண்டனையும் தாமதமின்றி வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE