எம்.எல்.ஏ.,வுக்காக காத்திருந்த அமைச்சர், ஐ.ஏ.எஸ்.,
தெருவெங்கும் பழைய பொருட்களை எரித்து, மேளம் அடித்தபடி சிறுவர்கள் போகி கொண்டாடிக் கொண்டிருக்க, புகை மூட்டத்தின் நடுவே பெரியவர்கள் பெஞ்சில் ஆஜராகினர்.
''வனத்துறை அமைச்சர் தொகுதியிலயே மரத்தை அமோகமா கடத்திட்டு போறாவ வே...'' என, ஏலக்காய் டீயை ருசித்தபடியே மேட்டரை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''அடப்பாவமே... விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வனச்சரகம், மேல்கூப்பு பகுதியில, பழங்குடியின மக்கள் வசிக்கும் 'பாரஸ்ட் செட்டில்மென்ட்' வனப்பகுதி இருக்கு... இங்கே தேயிலை, காபி விவசாயம் செய்துட்டு இருக்காவ வே...
''பழங்குடியின மக்கள் வாழும் வரை குறிப்பிட்ட நிலத்தை பயன்படுத்திக்கலாம்... ஆனா, விற்கக் கூடாது... இந்த பகுதிக்கு தனியார் எஸ்டேட் வழியா தான் போவணும் வே...
''சமீபத்துல இந்த பகுதியில விதிகளை மீறி, 'ரோடு பாஸ்' வாங்கி மூணு லோடு சில்வர் ஓக் மரங்கள், பல சோலை மரங்களை ஒருத்தர் வெட்டி கடத்தியிருக்காரு...
''இதுக்கு வனத்துறையினர் எப்படி அனுமதி குடுத்தாங்கன்னு கேள்வி எழுப்பி, அமைச்சருக்கு புகார்கள் போயிருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.
''செல்வராஜ் வாங்க... உங்க மகன் பொங்கலுக்கு வந்துட்டாரா...'' என, நண்பரிடம் நலம் விசாரித்த அந்தோணிசாமியே, ''சத்தமில்லாம நம்பர்களை எடுத்துட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறியபடியே பேச ஆரம்பித்தார்...
''தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்றது, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்றது போன்ற பணிகள்ல ஈடுபடுதுங்க...
''நெல் கொள்முதல்ல விவசாயிகளிடம் கமிஷன் வாங்குறது, அவங்களை அலைய விடுறதுன்னு நிறைய முறைகேடுகள் நடக்குது... இதனால, பாதிக்கப்படுறவங்க அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வசதியா, பொது மேலாளர்களின் அலுவலக தொலைபேசி, மொபைல் போன் நம்பர், மண்டல முதுநிலை மேலாளர்களின் மொபைல் போன் நம்பர்கள், வாணிப கழக இணையதளத்துல இருந்துச்சுங்க...
''இப்ப, திடீர்னு அதிகாரிகளின் மொபைல் போன் நம்பர்களை மட்டும் சத்தமில்லாம துாக்கிட்டாங்க... இதனால, புகார் அளிக்க முடியாம விவசாயிகள் உட்பட பல தரப்பினரும் சிரமப்படுறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''எம்.எல்.ஏ., பெரியவரா, அமைச்சர் பெரியவரா பா...'' என, திடீரென கேட்டார் அன்வர்பாய்.
''இதுல என்னவே சந்தேகம்... கண்டிப்பா அமைச்சர் பதவி தான் பெருசு...'' என்றார் அண்ணாச்சி.
''முழுசா கேட்டுட்டு பேசுங்க பா... தலைமை செயலகத்துல சுற்றுலாத் துறை அமைச்சர் அலுவலக முகப்புல, 'கலாசார கலை சிற்பம்' வடிவமைக்கப்பட்டிருக்குது... இதை, சேப்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி திறந்து வச்சாரு பா...
''அவரை வரவேற்க, தலைமை செயலக நான்காவது நுழைவு வாயிலுக்கு வெளியே, இரண்டு அமைச்சர்கள், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரு லோக்சபா எம்.பி., ஆகியோர் காத்து கிடந்தாங்க பா... உதயநிதி வந்ததும், பவ்யமா அழைச்சிட்டு போனாங்க... இப்ப சொல்லுங்கப்பா... எந்தப் பதவி பெருசு...'' என்றார் அன்வர்பாய்.
''ஹ... சேப்பாக்கம் எம்.எல்.ஏ., பதவி, சி.எம்.,முக்கும் மேற்பட்ட பதவில்லா...'' என, அண்ணாச்சி தீர்ப்பளிக்க, நண்பர்கள் சிரித்தபடியே நடையை கட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE