வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை துவக்க வேண்டும். கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்' என, 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
* மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாவுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மருத்துவ படிப்பு உட்பட அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்
* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2019 ஜன.,27ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவர் மட்டும் எழுப்பப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் அதிகாரிகளையும், கூடுதல் நிதியையும் ஒதுக்கி, கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாக அமைய மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்
![]()
|
* தமிழகத்தில் ஏற்கனவே 21 மாவட்டங்களில், 25 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. புதிதாக 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. மருத்துவ கல்லுாரிகள் இல்லாத ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், பெரம்பலுார், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசு அனுமதி அளிப்பதோடு, மொத்த செலவான 2,400 கோடி ரூபாயில், 60 சதவீதம் நிதியை அளித்து உதவ வேண்டும்
* தமிழகத்தில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை கோவையில் அமைக்க வேண்டும். தேவையான நிலத்தை தமிழக அரசு வழங்கும்
* மாநில அரசு நிதியில் உருவாக்கப்படும் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும்
* அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேவை செய்து வரும் மருத்துவ மாணவர்களுக்கு, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்
* வெளிநாடுகளில் மருத்துவம் படித்து, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி பெற 7.5 சதவீதம் பேர் அனுமதிக்கப்படுவதை 20 சதவீதமாக உயர்த்த அனுமதிக்க வேண்டும்
* தேசிய சுகாதார திட்டத்திற்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். முதுநிலை மருத்துவக்கல்வி ஒழுங்குமுறை வரைவை கைவிட வேண்டும்
* மாநிலத்தில் 19 வட்டார அரசு மருத்துவமனைகளை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மேம்படுத்த, 950 கோடி தேவை. இதற்கான கருத்துருவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE