செங்கல்பட்டு : ரவுடி கணவரை தாதாவாக ஆக்குவதற்கு, செங்கல்பட்டில் இருவரை கொலை செய்ததாக, போலீசாரிடம் கைதான இளம்பெண் வாக்குமூலம் அளித்தார்.
செங்கல்பட்டு, சின்னநத்தம் கே.கே., தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற 'அப்பு' கார்த்திக், 36; ரவுடி. ஒரு வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில், கடந்த 6ம் தேதி கையெழுத்திட்டு, அதே பகுதி ஒரு டீ கடையில் நின்றபோது, மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்தது.இவரது உறவினர், செங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சேர்ந்த மகேஷ்குமார், 22, என்பவரையும், வீடு புகுந்து, அந்த கும்பல் கத்தியால் வெட்டி கொன்றது.
இக்கொலைகளை செய்த தினேஷ், 23, 'பிஸ்கட்' மொய்தீன், 24, ஆகியோரை, போலீசர் என்கவுன்டர் செய்தனர். செங்கல்பட்டு நகர போலீசார், செங்கல்பட்டை சேர்ந்த மாதவன், 23, வல்லம் ஜெசிகா, 22, ஆகியோரை கைது செய்தனர்.
மாதவன், ஜெசிகாவை இரண்டு நாட்கள், போலீஸ் காவலில் விசாரிக்க, செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றம், நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இருவரையும் விசாரித்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் ஜெசிகா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்:
என் பெயர் ஜெசிகா; இயற்பெயர் ரம்ஜான்பீவி. செங்கல்பட்டு தனியார் பள்ளியில் படித்தபோது, உடன் படித்த அசோக் என்பவரை காதலித்து, திருமணம் செய்தேன்; இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். என் கணவர், 'குரங்கு' குமாரைப்போல், செங்கல்பட்டில் ஒரு தாதாவாக ஆக வேண்டும் என, அடிக்கடி சொல்வார்.
இதற்கு துணையாக, அவரது நண்பர்கள் தினேஷ்குமார், மாதவன், மொய்தீன், 'காட்டுப்பூச்சி' என்கிற கார்த்திக், ஜோன்ஸ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கணவருக்கு எதிரியான கார்த்திக் என்ற அப்பு கார்த்திக், அவரது உறவினர், மகேஷ்குமாரை, கொலை செய்ய வேண்டும் என, கணவர் கூறினார்.
கடந்த 4ம் தேதி, திண்டிவனம் சிறையில் உள்ள, கணவர் அசோக்கை பார்த்து, கார்த்திக், மகேஷ்குமார் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினேன். அவரும், கொலை செய்ய ஒப்புதல் கொடுத்தார்.
என் கணவரின் நண்பர் மாதவனுடன் நெருக்கமாகி, சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், கணவர் கூறியதை தெரிவித்தேன். அவரும், சரி என்று தெரிவித்தார். நான், கணவரின் நண்பர்களுடன் சேர்ந்து, இருவரையும் கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாதவன் வாக்குமூலம்:
பிறந்த நாள், திருமண நிகழ்ச்சிகளுக்கு, அலங்கார வேலை செய்து வருகிறேன். மது மற்றும் கஞ்சா அடிக்கும் பழக்கம் உண்டு.கடந்த 2018ல், நண்பர் தினேஷ்குமாரின் தங்கை பவித்ராவை, ஹரிகிருஷ்ணன் என்பவர் காதலித்தார்.
இதனால், ஹரிகிருஷ்ணனுக்கும், தினேஷ்குமாருக்கும் முன்விரோதம் இருந்தது.அப்போது, ஹரிகிருஷ்ணன் நண்பர் மகேஷ்குமார், அவரது நண்பர்கள் சேர்ந்து, தினேஷ்குமாரை வெட்டினர். இதனால் மகேஷ்குமாரை கொலை செய்ய வேண்டும் என, தினேஷ்குமார் என்னிடம் தெரிவித்தார்.
நண்பர்களுடன் மது அருந்தும்போது, ஜெசிகாவின் கணவர் அசோக்கிடம் பழக்கம் ஏற்பட்டது. கார்த்திக்கும், எனக்கும் முன்விரோதம் இருந்தது. நீண்ட நாள் திட்டமிட்டு, கார்த்திக், அவரது உறவினர் மகேஷ்குமாரை கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE