இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': ரூ.50 லட்சம் நகை கொள்ளையில் 3 பேர் கைது பகலில் நோட்டமிட்டு இரவில் கைவரிசை

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 13, 2022 | |
Advertisement
விழுப்புரத்தி்ல் கைதி திடீர் சாவுவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை பாட்டையைச் சேர்ந்தவர் சங்கர், 30; திருமணம் ஆகாதவர். ஆட்டோ திருட்டு வழக்கில், இவரை திண்டிவனம் போலீசார் டிச., 16ல் கைது செய்து, விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். அங்கு சங்கர், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் திடீரென வாந்தி எடுத்தார். தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை,

விழுப்புரத்தி்ல் கைதி திடீர் சாவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை பாட்டையைச் சேர்ந்தவர் சங்கர், 30; திருமணம் ஆகாதவர்.
ஆட்டோ திருட்டு வழக்கில், இவரை திண்டிவனம் போலீசார் டிச., 16ல் கைது செய்து, விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். அங்கு சங்கர், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் திடீரென வாந்தி எடுத்தார். தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி காலை 7:15 மணியளவில் இறந்தார்.latest tamil news


நகை பறித்தவர் கைது
வேடசந்தூர் : வேடசந்துாரில் மூதாட்டிகளிடம் நகை பறித்த ஜோடியில் கணேசன் 40, என்பவரும் நேற்று கைதானார். -கரூர் மாவட்டம் குளித்தலை தெலுங்குபட்டியைச் சேர்ந்தவர் சுமதி 38. காய்கறி வியாபாரம் செய்கிறார்.

இவருக்கும் குளித்தலை தோகைமலையை சேர்ந்த கட்டடத் தொழிலாளி கணேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றி வந்தனர். வேடசந்தூர் குன்னம்பட்டி மூதாட்டி முனியம்மாளை 65, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறி, தோடு மூக்குத்தியை பறித்துச் சென்றனர். விசாரித்த போலீசார், கடந்த வாரம் வேடசந்துாரில் சுமதியை கைது செய்தனர்.அப்போது தப்பிச் சென்ற கணேசனை தேடி வந்தனர். நேற்று முன்தினம் வேடசந்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த கணேசனை கைது செய்தனர்.

கத்தியை காட்டி மிரட்டிய வியாபாரி பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு
பல்லடம் : பஞ்சாப் சம்பவம் தொடர்பாக, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டம் முடிந்து அனைவரும் செல்லும்போது, ஒருவர் பிரதமரை தரக்குறைவாக பேசியதால் அவருக்கும், பா.ஜ., நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் நீடித்ததால், கூடுதல் போலீசார் அங்கு வந்தனர். போலீஸ் பாதுகாப்பையும் மீறி, இரு தரப்பினரும் மோதினர். பின், போலீசார் அந்த நபரை அழைத்து சென்றனர்.

இது குறித்து, பா.ஜ., மாவட்ட செயலாளர் வினோத் வெங்கடேஷ் பல்லடம் போலீசில் அளித்த புகாரில், 'பழ வியாபாரி முத்துசாமி என்பவர், பிரதமர் குறித்து தரக்குறைவாக பேசியதுடன், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். தாக்க வந்த அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தோம். பிரதமர் குறித்து தரக்குறைவாகப் பேசி, நிர்வாகிகளை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்ட வியாபாரி முத்துசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.


latest tamil news


'பொங்கிய' மக்கள்! துகள் கொட்டும் லாரிகள் சிறைபிடிப்பு 12 மணி நேரம் நீடித்த போராட்டம்
பல்லடம்--ரோட்டில் சிதறி விழும் ஜல்லி கற்கள், கிரஷர் துகள்களால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, பல்லடம் அருகே கிராம மக்கள், லாரிகளை சிறைபிடித்து, 12 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் அருகே கோடங்கி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏராளமான கிரஷர் நிறுவனங்கள், கல்குவாரிகள் உள்ளன. இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஜல்லி கற்கள், துகள்கள் உள்ளிட்டவை, லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

இந்த லாரிகளில் இருந்து விழும் ஜல்லி கற்கள் துகள்களால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நேற்று முன்தினம், கோடங்கிபாளையம் கிராமத்தில், ரோட்டில் கிடந்த ஜல்லி கற்களால் வாகன ஓட்டி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:இவ்வழியாக செல்லும் கிரஷர் லாரிகள், ஜல்லி கற்கள், கிரஷர் துகள்களை அதிக அளவில் ஏற்றி செல்கின்றன.

இதனால், எண்ணற்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக, தொடர்ந்து புகார் அளித்தும், கிரஷர் நிறுவனங்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றன.அதிகாரிகளும் விதிமுறை மீறும் கிரஷர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. நேற்று முன்தினம் இரவு, ரோட்டில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களால் தவறி விழுந்த வாகன ஓட்டி ஒருவர், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். கோடங்கிபாளையம் கிராமத்துக்குள் வராமல், கிரஷர் லாரிகள் செல்ல மாற்றுப்பாதை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம், 12.00 மணி வரை, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்தது. தகவல் அறிந்து வந்த பல்லடம் தாசில்தார் தேவராஜ், மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரிகள் செல்ல மாற்று வழி ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்தனர். இதனால், 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

விவசாய தோட்டத்தில் விஷத்தால் மயில்கள் பலி
கிணத்துக்கடவு-கிணத்துக்கடவு, வடபுதுார் பாரதிநகரை சேர்ந்தவர் குப்புசாமி, 60. கடந்த சில நாட்களாக, இவரது தோட்டத்தில், மயில்கள் இறந்து கிடக்கும் தகவல், பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியவந்தது.இதுகுறித்து, பொள்ளாச்சி கோட்ட வனபாதுகாவலருக்கு புகார் சென்றது. நேற்று மதியம், 2:30 மணிக்கு வனத்துறையினர் வடபுதுார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு, 8 பெண் மயில்கள், ஒரு ஆண் மயில் இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டு, கைப்பற்றப்பட்டது. பொள்ளாச்சி கோட்ட வனபாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்ரமணியம் உத்தரவில், கால்நடை மருத்துவரால், சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், மயில்கள் அனைத்தும் விஷம் வைத்து கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது. தலைமறைவான, தோட்டத்து உரிமையாளர் விரைவில், கைது செய்யப்படுவார் என, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

55 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
சூலுார்--அரசூர் பகுதியில், வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, சூலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் நடத்திய சோதனையில், அரசூர் பாக்கு தோப்பு பகுதியில், ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 55 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, ஒடிசா மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த கடாதர் மாலிக், 25 என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 62 ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆசிரியையிடம் நுாதன 'ஆட்டை' மர்ம நபர் குறித்து விசாரணை
பொன்னேரி : புது ஏ.டி.எம்., கார்டு 'ஆக்டிவேட்' செய்ய சென்ற ஆசிரியையிடம், 38 ஆயிரம் ரூபாய் 'ஆட்டை' போட்ட மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
எர்ணாவூரைச் சேர்ந்தவர் மரிய ஜெயபாமா, 42; அரசு பள்ளி ஆசிரியை. இவர், நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, தேரடி தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., மையத்திற்கு, புது ஏ.டி.எம்., கார்டை 'ஆக்டிவேட்' செய்து கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில், மரிய ஜெயபாமாவிடன் வங்கி கணக்கில் இருந்து, நான்கு முறை, 9,500 ரூபாய் வீதம், 38 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக மொபைல் போனுக்கு குறுந்தகவல் வந்தது.அதிர்ச்சியடைந்த அவர், வங்கி மேலாளரிடம் புகார் அளித்தார். உடனடியாக வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இது தொடர்பாக, பொன்னேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 'சிசிடிவி' காட்சி பதிவுகளை கொண்டு ஆசிரியையிடம் நுாதன திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கணக்கீட்டாளர் மீது தாக்குதல் மின் ஊழியர்கள் போராட்டம்
மறைமலை நகர் : கோவளம் பகுதியில், மின் கணக்கீட்டாளரை தாக்கியவரை கைது செய்யாததை கண்டித்து, மறைமலை நகர் மின் வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவளம் அடுத்த பேரூர் கிராமத்தில், கடந்த சனிக்கிழமை, மின் அளவு கணக்கீட்டுக்கு சென்ற மின்வாரிய ஊழியர் முத்துராமனை, அதே கிராமத்தைச் சேர்ந்த லோகமுத்து என்பவர் தாக்கினார்.'என் வீட்டிற்கு மட்டும் மாதம் தோறும் அதிகமாக பில் போடுகிறாய்; குறைத்து போட வேண்டும்' எனக்கூறி தாக்குதல் நடத்தினார்.

இதை கண்டித்து, மறைமலை நகரைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள், மின் ஊழியரை தாக்கிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி, மறைமலை நகர் செயற்பொறியாளர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம், மறைமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடேசன் பேச்சு நடத்தினார். சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

ரூ.10 லட்சம் திருடி விட்டு நாடகமாடிய ஊழியர் கைது

கோவை--நள்ளிரவில் மளிகை கடைக்குள் புகுந்து, 10 லட்சம் ரூபாயை திருடி, கொள்ளை நாடகமாடிய கடை ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.கேரளாவை சேர்ந்தவர் அஜீஸ்,45. இவர் கோவை, டவுன்ஹால் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சம்ஜீத், 28 என்பவர் பணியாற்றி வருகிறார்.

உக்கடம் பகுதியில் தங்கியுள்ள ஊழியர், இரு தினங்களுக்கு முன் இரவு கடையை மூடிவிட்டு அறைக்கு சென்றார்.மறுநாள் காலை கடைக்கு வந்த ஊழியர், கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போனதாக கடை உரிமையாளருக்கு தகவல் அளித்தார். உரிமையாளர் உக்கடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்ஜீத் கடையின் சி.சி.டிவி., கேமராவில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை எடுத்து மறைக்க முயன்றார். இதனை பார்த்து சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்..

விசாரணையில், நள்ளிரவில் கடையை திறந்து கடையில் வைக்கப்பட்டிருந்த பத்து லட்சம் ரூபாய் பணத்தை வாலிபர் திருடிச்சென்றதும், காலையில் கடையை திறந்து பணம் திருடு போனதாக நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, வாலிபரை கைது செய்த போலீசார், அவரது அறையில் பதுக்கி வைத்திருந்த பத்து லட்சம் ரூபாய் பணத்தை, பறிமுதல் செய்தனர். இந்த திருட்டில் வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும், விசாரித்து வருகின்றனர்.

நகைக்கடையில் மோதிரம் திருட்டு இரு நபர்களுக்கு போலீஸ் வலை

கோவை-கோவையில் பிரபல நகைக்கடையில் குழந்தைகளுக்கான மோதிரம் திருடிய நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்படும், பவிழம் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் மேலாளராக வேலை பார்ப்பவர் ஸ்டான்லி, 38. இவர், கடந்த 10ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கணக்கு சரி பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

கடையில் இருப்பு நகையை சரி பார்த்தபோது, குழந்தைகளுக்கான 14 தங்க மோதிரங்கள் காணாமல் போயிருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு, 44 ஆயிரம் ரூபாய்.சிசிடிவி காட்சிப்பதிவுகள் சரி பார்க்கப்பட்டன. இதில், 2 பேர் மோதிரங்களை எடுத்துக் கொண்டு வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது. ஸ்டான்லி காட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ரூ.50 லட்சம் நகை கொள்ளையில் 3 பேர் கைது பகலில் நோட்டமிட்டு இரவில் கைவரிசை
ராமநாதபுரம்:பகலில் அம்மி கொத்துவது, பாத்திரம் முலாம் பூசுவது போல் நடித்து ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு ராமநாதபுரம் அருகே மூன்று வீடுகளில் ரூ.50 லட்சம் நகைகளை கொள்ளையடித்த தேனி மாவட்டத்தை சேர்ந்த முத்தையா 38, மணிகண்டன் 32, ரெங்கநாதன் 45, கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டை கிராமத்தில் துபாயில் வேலை செய்யும் சீனிமுகமது, மலேசியாவில் வேலை செய்யும் அகமது அலி, அக்பர் அலி ஆகியோரது ஆள் இல்லாத பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து 108 பவுன் தங்க நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் என ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை பணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப் பட்டது.அங்குள்ள பள்ளிவாசலில் பதிவான சி.சி.டி.வி., பதிவுகளைக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை பிடிக்க எஸ்.பி., கார்த்திக் உத்தரவிட்டார்.


latest tamil news


குற்றப்பிரிவு எஸ்.ஐ.,க்கள் ராமச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் தலைமையில் இரண்டு தனிப்டையினர் தேடினர்.கொள்ளையில் ஈடுபட்ட தேனி அரண்மனைபுதுார் பகுதியை சேர்ந்த கல்கொத்தும், பானை ஈயம் பூசும் தொழில் செய்த முத்தையா, மணிகண்டன், ரெங்கநாதன் ஆகிய மூவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவான ஆனந்தனை தேடி வருகின்றனர்.இவர்கள் நான்கு பேரும் மதுரை, தேனி, ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பூட்டியிருக்கும் ஆள் இல்லாத வீடுகளை பகலில் அம்மி கொத்துவது, ஈயம் பூசுவது போல நோட்டமிட்டு இரவில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.மூவரிடம் இருந்து 70 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

தலைமறைவான ஒருவரை கைது செய்தால் மட்டுமே முழுமையாக நகைகளை மீட்க முடியும், என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X