லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பிரியங்கா வெளியிட்டுள்ளார். இதில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 40 சதவீத தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்., பொதுச்செயலர் பிரியங்கா வெளியிட்டார். மொத்தம் 125 பேர் கொண்ட இந்த வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், 2017ல் பா.ஜ., எம்எல்ஏ.,வால் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமியின் தாய் ஆஷா சிங், உன்னாவ் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் உ.பி., தேர்தலில் காங்கிரசில் 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று பிரியங்கா அறிவித்திருந்தார். அதன்படி, மொத்தமுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவீதம் பெண்களுக்கும், 40 சதவீதம் இளைஞர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் பிரியங்கா பேசியதாவது:
மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பாலின சமத்துவத்தில் கவனம் செலுத்தி பெண்களுக்கு முக்கியவத்துவம் கொடுத்துள்ளோம்.
நீங்கள் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியிருந்தால், காங்கிரஸ் உங்களுக்கு ஆதரவளிக்கும் என்பதற்கு சான்றே இந்தப் பட்டியல். இந்த வரலாற்று முயற்சி. இதன் மூலம், மாநிலத்தில் ஒரு புதிய அரசியலை கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE