'விநாச காலே விபரீத புத்தி!'
என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல்கலை துணைவேந்தர்களை இதுவரை, 'வேந்தர்' என்ற முறையில், கவர்னரே நியமனம் செய்து வந்தார்.இப்போது இந்தப் பொறுப்பை, தி.மு.க., அரசு எடுத்துக் கொள்ள விரும்புகிறது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்று, முடிவு செய்துள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி ரொம்ப கண்டிப்பானவர் என கருதப்படுவதால், இந்த திடீர் முடிவுக்கு தி.மு.க., அரசு வந்துவிட்டதோ என்ற, 'டவுட்' நமக்கு வருகிறது.அறங்காவலர்களாக கட்சிக்காரர்களை நியமித்து, கோவிலின் புனிதத்தைக் கெடுத்தது போல, 'ஜால்ரா பேர்வழி'களை பல்கலை துணைவேந்தராக நியமனம் செய்ய, தி.மு.க., அரசு முடிவு செய்து விட்டது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த சுரப்பா, மாநில அரசுக்கு ஜால்ரா அடிக்காமல், பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு மட்டும் கட்டுப்பட்டு செயல்பட்டார்.
தேர்வு நடத்தாமலேயே, 'ஆல் பாஸ்' போடும் அ.தி.மு.க., அரசின் முடிவை ஏற்க முடியாது என்று, அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதனால் அவருக்கு தேவையில்லாமல் பல நெருக்கடிகளை, கடந்த அ.தி.மு.க., அரசு கொடுத்தது.
பல துணைவேந்தர்கள், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்த கதை, நமக்கு தெரியும்.திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், கல்வித்துறை பல வழிகளில் சீரழிந்து போனது தான் மிச்சம்.ஒரு காலத்தில் சென்னைப் பல்கலை, துணைவேந்தர் லட்சுமண சாமி முதலியார் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. மதுரைப் பல்கலை, மீனாட்சி சுந்தரனார் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பெருமை பெற்றது.
அதன் பிறகு வந்த துணைவேந்தர்கள் பலர், பணம் சம்பாதிக்க முடிவு செய்து, பல்கலையை வியாபார நிறுவனங்களாக மாற்றிவிட்டனர்.எனவே துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசே எடுத்துக் கொள்வது நல்லதாக தெரியவில்லை.கவர்னர் மாளிகை என்பது, தலையாட்டி பொம்மை வசிக்கும் இடமாக இருக்க வேண்டும் என, திராவிட கழகங்கள் நினைக்கின்றன.
தி.மு.க., ஆட்சி காலத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகள் அரங்கேற காத்திருக்கின்றனவோ?'விநாச காலே விபரீத புத்தி' என்பது சரியாகத் தான் இருக்கிறது!
அப்பப்பா...என்ன வேகம்!
சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சிலரிடம் 3 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்து விட்டதாக
புகார்கள் வந்தன.உடனே அவர் மீது, போலீசார் வழக்குபதிந்தனர். தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய, எட்டு தனிப்படைகள் அமைத்தனர். 'லுக்கவுட் நோட்டீஸ்' வெளியிட்டனர்; அவரின் உறவினர்களை கைது செய்தனர்.
இதோ, ராஜேந்திர பாலாஜியையும் சுற்றி வளைத்து கைது செய்து விட்டனர்.அப்பப்பா... என்ன வேகம்!அதே போல, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள், தற்போதைய அமைச்சர்கள் மீதும், ஊழல், சொத்து குவிப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் ஆமை வேகத்தில், 'வாய்தா' வாங்கியே காலம்
தாழ்த்தப்படுகிறதே... அவற்றில், தி.மு.க., அரசு வேகம் காட்டுமா?தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் குற்றமற்றோர் என அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கூறுவாரா?
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ராஜேந்திர பாலாஜி விஷயத்தை மட்டும் பெரிதுபடுத்தி காட்டுவது எதற்காக?
சட்டசபை தேர்தலில், தி.மு.க., அள்ளி இறைத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், வரும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்.
அதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியே, ராஜேந்திர பாலாஜி விஷயம் மீது காட்டும் அதீத விளம்பரம் என்றே தோன்றுகிறது.
கூட்டி கழித்துபார்த்தால்...
ப.செல்வம், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட பிரச்னையை முன்வைத்து பஞ்சாப் மற்றும் மக்களை அவமானப்படுத்த சதி நடக்கிறது. பிரதமருக்கு, யாரும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. பஞ்சாப் மக்கள் ஒருபோதும் அது மாதிரியான செயலில் ஈடுபட மாட்டார்கள்' என, அம்மாநில காங்., - முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியுள்ளார்.
நம் ராணுவத்தில், 'சிக் ரெஜிமென்ட்' என்று ஒரு படைப்பிரிவே உள்ளது. ஆயினும், முன்னாள் பிரதமர் இந்திராவை சுட்டுக் கொன்றோர், சீக்கிய பாதுகாப்பு படையினர் தானே?
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது போல, 'காலிஸ்தான்' என்ற தனி நாடு கோருவோர், சீக்கியர்கள் இல்லையா?தமிழகத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், ஸ்ரீபெரும்புதுாரில் மனித வெடிகுண்டு வாயிலாக கொலை செய்யப்பட்டார். முன்கூட்டியே மிரட்டல் விடுத்த பின் தான், 'விடுதலைப் புலிகள்' அமைப்பினர் அந்த படுபாதக செயலில் இறங்கினர்?
பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங்கே தொடர்ந்திருந்தால், பிரதமர் கான்வாய் மறியல் போன்ற சம்பவமே நடந்திருக்காது.காங்., தலைமை, அமரீந்தரை பதவி விலக வைத்து, செப்., 20ம் தேதி தான், முதல்வர் பதவியில் சன்னியை அமர்த்தியது. அவர் முதல்வர் பதவியில் அமர்ந்த, 108வது நாள், பிரதமருக்கு எதிரான இச்சம்பவம் நடந்திருக்கிறது.
பஞ்சாப் மக்கள் நல்லவரே... ஆனால், காங்கிரஸ் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லையே.குற்ற வழக்கில் சிக்கிய சதிகாரர், 'சம்பவம் நடந்தபோது, நான் இந்தியாவிலேயே இல்லை' என, ஆதாரத்துடன் கூறுவதை, நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஐந்து மாதத்தில், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நேரத்தில் பிரதமர் கனவில் மிதக்கும் ராகுல் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்?
முதல்வர் பதவில் இருந்த அமரீந்தர் சிங்கை விலகச் சொல்லி, சரண்ஜித் சிங் சன்னியை அமர வைத்ததையும்; தருணம் பார்த்து ராகுல், இத்தாலிக்கு பறந்ததையும் கூட்டிக் கழித்து பார்த்தால்... ஏதோ இடிக்குதே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE