காங்., முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி., பேச்சு: என்னுடைய அரசியல் என்பது மஹாத்மா காந்தியின் சித்தாந்தத்தை தழுவியது. பொய் சொல்லி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து என்னால் அரசியல் செய்ய முடியாது. இந்த தேசத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் காப்பாற்ற முடியும்.காந்தியின் சித்தாந்தம் தான், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, எங்கே செல்கிறேன் என சொல்லாமல், ஐரோப்பிய நாடுகளில் பல வாரங்கள் தலைமறைவாக இருப்பதா?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் பேட்டி: இனி வரும் காலங்களில், தமிழ் வழியில் தேர்வுகள் நடத்தப்படும். அடுத்த மாதம் நடைபெறும், 'குரூப் - 4' தேர்வு, 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் செய்குறி தேர்வு முறையில் தமிழில் இருக்கும்.தமிழில் தயாரிக்கப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள்கள், கரீபியன் தீவு நாடுகளில் உள்ள தமிழர்களுக்காக தயாரிக்கப்பட்டது போல, கடினமாக இருப்பதாக தேர்வர்கள் புலம்புகின்றனரே!
ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: திருப்பூரில் குமரன் புகழை மறைக்கும் வகையிலும், அந்த நினைவிடத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலும், இதர சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கருணாநிதி சிலை வைக்கவும் முயற்சி நடக்கிறது.இந்த அரசுக்கு தேச பக்தர்கள், உண்மையான தியாகிகள் எல்லாம் தெரியாது. இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் அவர் எழுதிய, 'நெஞ்சுக்கு நீதி' மற்றும் அவர்களின் கட்சி பத்திரிகையான, 'முரசொலி' மட்டும் தான்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை: சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ள, ஐந்து மாநிலங்களிலும், பா.ஜ.,வைத் தோற்கடிப்பதை உறுதி செய்வதே எங்கள் பிரதான கடமை.டில்லியிலிருந்து, சென்னை வரை கம்யூனிஸ்ட், 'காம்ரேட்டு'களின் சமீபகால விருப்பம் இதுவாகத் தான் இருக்கிறது. எனினும், ஐந்து மாநில மக்கள் அப்படி நினைக்கவில்லையே!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி: பஞ்சாபில் பிரதமருக்கு நடந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து, எதிர்மறையான கருத்துகளை பேசிய, எம்.பி.,க்கள் திருமாவளவன், ஜோதிமணியை கைது செய்ய வேண்டும்.எதிர்மறையாக பேசவும், கருத்து தெரிவிக்கவும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. ஆனால், இவர்கள் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு எதிராக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்; அது தான் சிக்கல்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE