குப்பையில் கோடிகளை அடித்த அசகாய அதிகாரி!
பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பெரியசாமி
அண்ணாச்சி தந்த சர்க்கரை பொங்கலை ருசித்தபடியே, ''பிஞ்சுகள் நெஞ்சுல நஞ்சை விதைச்சுண்டு இருக்கா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒண்ணு இருக்கு... இங்க, இரு பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர், அவாவா பிரிவைச் சேர்ந்த மாணவர்களை சேர்த்துண்டு, எதிர் பிரிவு மாணவர்களோட மோத வைக்கறா ஓய்...
''இதனால, இந்த பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்துலயும், வெளியிலயும் அடிக்கடி அடிதடியில இறங்கிடறா... இதுல சிலர் காயங்களோட மருத்துவமனைக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் நடையா நடந்துண்டு இருக்கா ஓய்...
''இந்த அக்கப்போர்ல, மற்ற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படறதா, 'பேரன்ட்ஸ்' எல்லாம் புலம்பறா... கல்வித் துறை கொஞ்சம் கவனம் செலுத்தினா நன்னா இருக்கும் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''மேயர் தேர்தல் சூடு பிடிச்சிட்டுல்லா...'' என, அடுத்த தகவலை கையில் எடுத்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி மேயர் பதவியை எப்படியும் பிடிச்சாகணும்னு தி.மு.க., தலைமை சொல்லிட்டு... மொத்தம் இருக்கிற, 45 வார்டுகள்ல போட்டியிட, தி.மு.க., நிர்வாகிகள் முட்டி மோதுதாவ வே...
''முதல்வரின் மருமகன் சபரீசன் ஏற்பாட்டுல ஒரு குழு ஓசூர்ல முகாமிட்டு, வார்டுதோறும் போட்டியிட ஆர்வமா இருக்கும் நிர்வாகிகளை சந்திச்சு, யாருக்கு செல்வாக்கு இருக்குன்னு அலசி ஆராய்ஞ்சுட்டு இருக்கு வே...
''கவுன்சிலர் பதவிக்கு எவ்வளவு செலவு செய்ய தயாரா இருக்காங்கங்கறது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு... அதுவும் இல்லாம, மேயருக்கு நேரடியா தேர்தல் நடத்தினா, ஓசூரில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம்னு மக்களிடமும், தி.மு.க., உறுப்பினர்களிடமும் குழுவினர், தனித்தனியாக சர்வே எடுத்துட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''குப்பையில கோடிகளை அடிச்சிருக்காங்க...'' என, அடுத்த தகவலை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''கார்ப்பரேஷன் வட்டார தகவலா வே...'' என்றார் அண்ணாச்சி.
''கோவை மாநகராட்சி பகுதியில அள்ளுற குப்பைகளை, வெள்ளலுார் கிடங்குல கொட்டுறாங்க... குப்பையை மேலாண்மை செய்யறதுக்கு, ஒவ்வொரு வருஷமும் பல கோடி ரூபாய் செலவழிக்கிறாங்க...
''இதை ஆய்வு செய்த தணிக்கைத் துறை, அவசியமின்றி தனியார் வாகனங்களை ஒப்பந்தம் செஞ்சதுல, 43.24 கோடி, குப்பை தொட்டி வாங்கியதுல, 5.29 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டிருக்குன்னு அறிக்கை தந்துச்சுங்க...
''ஆனா, இதை மாநகராட்சி அதிகாரிகள் சட்டையே செய்யலை... இது சம்பந்தமா, சட்டசபை பொதுக் கணக்கு குழு தலைவரான செல்வப் பெருந்தகை ஆய்வு செஞ்சப்ப, ஏகப்பட்ட கேள்வி கேட்டிருக்காருங்க... அதுக்கு அதிகாரிகள் தந்த பதில்ல திருப்தி ஆகாம, விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு போட்டிருக்காருங்க...
''இந்த விவகாரத்துல, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டும், குப்பை கிடங்கு பொறுப்பாளரா இருக்கிறவருக்கு, இழப்பு தொகை பறிமுதல், 'மெமோ, சஸ்பெண்ட்'னு, துறை ரீதியா எந்த நடவடிக்கையும் எடுக்காம உயர் அதிகாரிகள் கமுக்கமாக இருக்காங்க...
''அ.தி.மு.க., ஆட்சியில இருந்து இதே பொறுப்புல இருக்கிற அதிகாரி, அடுத்து இப்ப தி.மு.க., அரசு குப்பை மேலாண்மைக்கு ஒதுக்கியிருக்கிற, 11 கோடிரூபாயில எப்படி எல்லாம் கை வைக்கலாம்னு யோசனை பண்ணிட்டு இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''வாங்க ரவி கண்ணன்... ஆத்துல பொங்கல் வச்சேளா... பால் பொங்கித்தா...'' என, நண்பரிடம் நலம் விசாரித்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE