வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல்கலை துணைவேந்தர்களை இதுவரை, 'வேந்தர்' என்ற முறையில், கவர்னரே நியமனம் செய்து வந்தார். இப்போது இந்தப் பொறுப்பை, தி.மு.க., அரசு எடுத்துக் கொள்ள விரும்புகிறது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்று, முடிவு செய்துள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி ரொம்ப கண்டிப்பானவர் என கருதப்படுவதால், இந்த திடீர் முடிவுக்கு தி.மு.க., அரசு வந்துவிட்டதோ என்ற, 'டவுட்' நமக்கு வருகிறது.
அறங்காவலர்களாக கட்சிக்காரர்களை நியமித்து, கோவிலின் புனிதத்தைக் கெடுத்தது போல, 'ஜால்ரா பேர்வழி'களை பல்கலை துணைவேந்தராக நியமனம் செய்ய, தி.மு.க., அரசு முடிவு செய்து விட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த சுரப்பா, மாநில அரசுக்கு ஜால்ரா அடிக்காமல், பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு மட்டும் கட்டுப்பட்டு செயல்பட்டார்.
தேர்வு நடத்தாமலேயே, 'ஆல் பாஸ்' போடும் அ.தி.மு.க., அரசின் முடிவை ஏற்க முடியாது என்று, அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதனால் அவருக்கு தேவையில்லாமல் பல நெருக்கடிகளை, கடந்த அ.தி.மு.க., அரசு கொடுத்தது. பல துணைவேந்தர்கள், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்த கதை, நமக்கு தெரியும்.
![]()
|
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், கல்வித்துறை பல வழிகளில் சீரழிந்து போனது தான் மிச்சம். ஒரு காலத்தில் சென்னைப் பல்கலை, துணைவேந்தர் லட்சுமண சாமி முதலியார் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. மதுரைப் பல்கலை, மீனாட்சி சுந்தரனார் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பெருமை பெற்றது. அதன் பிறகு வந்த துணைவேந்தர்கள் பலர், பணம் சம்பாதிக்க முடிவு செய்து, பல்கலையை வியாபார நிறுவனங்களாக மாற்றிவிட்டனர்.
எனவே துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசே எடுத்துக் கொள்வது நல்லதாக தெரியவில்லை. கவர்னர் மாளிகை என்பது, தலையாட்டி பொம்மை வசிக்கும் இடமாக இருக்க வேண்டும் என, திராவிட கழகங்கள் நினைக்கின்றன. தி.மு.க., ஆட்சி காலத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகள் அரங்கேற காத்திருக்கின்றனவோ? 'விநாச காலே விபரீத புத்தி' என்பது சரியாகத் தான் இருக்கிறது!