இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: முட்டை தோசை தொண்டையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:பயங்கரவாதி சுட்டுக்கொலைஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில்
crime, murder, arrest


இந்திய நிகழ்வுகள்:பயங்கரவாதி சுட்டுக்கொலை


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதி பாபர் பாய் கொல்லப்பட்டார்.


மதம் மாற்ற முயற்சி: 4 பேர் கைது


சேஹோர்: மத்திய பிரதேசத்தின் சேஹோர் மாவட்டத்தில் மனோஹர் பன்சால் என்பவர் வசித்து வருகிறார். கடந்த வாரம் இவரிடம் நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவினர் வந்து பேசினர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், அவரது குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைக்க வழிவகை செய்வதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். அதை பன்சால் ஏற்க மறுத்துள்ளார். பின், அந்த அமைப்பினர் அவரை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் நான்கு பேரும்கைது செய்யப்பட்டனர்.


பிரதமரை அவமதித்த நபரை பஸ்சிலிருந்து தள்ளிய பெண்கள்


மைசூரு: பஸ்சில் செல்லும் போது பெண்களை கேலி செய்ததுடன், பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசிய நபரை பெண்கள் பஸ்சிலிருந்து கீழே தள்ளி, சரமாரியாக உதைத்தனர்.
மைசூரு நகரின் பஸ் நிலையத்திலிருந்து, மேடகல்லி வழியாக பஸ் ஒன்று சென்றது. பஸ்சில் இருந்த நபரொருவர், பெண் பயணியரை கேலி செய்து தொந்தரவு கொடுத்தார். அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்தர மோடியை அவமதிக்கும் வகையில் பேசினார். இதை பெண் பயணியர் கண்டித்தனர். அவர்களை கொலை செய்வதாக மிரட்டினார்.
கோபமடைந்த பெண்கள், அந்நபரை பஸ்சிலிருந்து கீழே தள்ளி அடித்து துவைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. பெண்களின் தைரியத்தை பலரும் பாராட்டினர். அந்நபர் மீது, போலீஸ் நிலையத்தில் வழக்கேதும் பதிவாகவில்லை.


மே. வங்கத்தில் ரயில் விபத்து 5 பேர் பலி; 45 பேர் காயம்


கோல்கட்டா: அசாமின் கவுஹாத்தி - ராஜஸ்தானின் பிகானீர் இடையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்கத்தின் வழியாக சென்றது. இங்குள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் சென்றபோது அந்த ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.புது டோமோஹானி மற்றும் புது மைனகுரி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த விபத்தில் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன.இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இளம் பெண்களை மிரட்டி பணம் பறித்த மாணவர் கைது


பெங்களூரு: நிர்வாண படங்களை வெளியிடுவதாக இளம் பெண்களை மிரட்டி பணம் பறித்த பெங்களூரு கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இறுதியாண்டு படிப்பவர் பிரபஞ்ச் நாச்சப்பா, 21. இவர் சமூக வலைதளங்களில் 'லெஸ்பியன்' என அறிமுகம் செய்து ஏராளமான இளம் பெண்களுடன் பழகியுள்ளார்.அவர்களிடம் இருந்து நிர்வாண படங்களை வாங்கி உள்ளார். இதைஅடுத்து அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகார் அடிப்படையில் போலீசார், பிரபஞ்ச் நாச்சப்பாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு படத்துக்கும் 4,000 ரூபாய் என இதுவரை 2 லட்சம் ரூபாய் வரை அவர் பெண்களிடம் இருந்து பறித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


உலக நிகழ்வுகள்:அமெரிக்காவில் மோசடி: இந்தியருக்கு வலை


நியூயார்க் : அமெரிக்காவில் முதியோரிடம் 4.50 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இந்தியர் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஆன்டனி முனிகெடி மற்றும் இந்தியாவை சேர்ந்த ரவிகுமார் ஆகிய இருவரும் அமெரிக்காவில் வசிக்கும் முதியோரை குறிவைத்து பணமோசடி செய்துள்ளனர்.இருவரும் சேர்ந்து முதியோரிடம் இருந்து 4.50 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆன்டனி முனிகெடியிடம் விசாரணை நடக்கிறது. இந்தியாவுக்கு தப்பி விட்ட ரவிகுமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப் படலாம்.


'மாஜி' சிறை அதிகாரிக்கு துாக்கு


கொழும்பு: இலங்கை வெலிக்கடை சிறையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறையின் முன்னாள் கண்காணிப்பாளருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையின் வெலிக்கடை சிறையில் கைதிகளிடம் போதைபொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து 2012 நவ.,9ல் சிறையில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதலை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 27 கைதிகள் உயிரிழந்தனர்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவா, வெலிக்கடை சிறை கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்க ஜீவா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறை கண்காணிப்பாளராக இருந்த எமில் ரஞ்சனுக்கு துாக்கு தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தமிழக நிகழ்வுகள்:ஜன.27 வரை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை


ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை பொங்கலுக்கு விடுவிக்காமல் ஜன., 27 வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிச. 19ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 3வது முறையாக நீதிமன்ற வாய்தா நாளான நேற்று 43 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
மீனவர்கள் விடுவிக்கப்பட்டு குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் அவர்களின் காவலை நீட்டித்து ஜன. 27 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மீனவர் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் அந்நாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil newsகள்ளநோட்டு புழக்கம் தந்தை, மகன் கைது


பாப்பிரெட்டிப்பட்டி:சந்தையில், கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட தந்தை, மகனை போலீசார் கைதுசெய்தனர்.-
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த ரேகட ஹள்ளியைச் சேர்ந்தவர் சரவணன், 38; ஆடு வியாபாரி. இவர் நேற்று காலை, பொம்மிடி வடசந்தையூரில் நடந்த கால்நடை சந்தையில், நான்கு ஆடுகளை விற்பதற்கு நின்றிருந்தார்.
அப்போது, வியாபாரிகளான துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரைச் சேர்ந்த மாணிக்கம், 58; மகன் சிவசங்கரநாதன், 23, ஆகிய இருவரும் சரவணனிடம், 15 ஆயிரம் ரூபாய்க்கு நான்கு ஆடுகளை விலை பேசி வாங்கி, 500 ரூபாய் நோட்டுகள், 30ஐ கொடுத்துள்ளனர். அதை எண்ணியபோது கள்ளநோட்டுகள் என தெரிந்தது.
இது குறித்து பொம்மிடி போலீசில் கொடுத்த புகார்படி, மாணிக்கம், சிவசங்கரநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஒரு லட்சத்து, 1,500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார்பறிமுதல் செய்தனர்.


அரசு வேலை பெயரில் மோசடி ரூ.60 லட்சம் பறித்தவர் கைது


ராணிப்பேட்டை: அரசு வேலை வாங்கித் தருவதாக, பலரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மேச்சேரியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 45. இவரது உறவினர், திருப்பத்துார் மாவட்டம், செவ்வாத்துாரைச் சேர்ந்த தேன்மொழி, 35. இவர் மகளிர் குழு நடத்தி வருகிறார்.தனக்கு சென்னையில் அரசு உயர் அதிகாரிகளை தெரியும், பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கான கமிஷனை தந்து விடுவதாகவும் ஏழுமலையிடம் கூறினார்.
இதை நம்பிய ஏழுமலை, பலரை தேன்மொழியிடம் அழைத்து வந்தார். அவர்களுக்கு ஆவின், தலைமை செயலகம், தபால் துறை ஆகியவற்றில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 2018ல், 25 பேரிடம், 60 லட்சம் ரூபாயை தேன்மொழி வாங்கினார். யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்படி, கலவை போலீசார், திருப்பத்துாரில் பதுங்கியிருந்த தேன்மொழியை கைது செய்தனர்.


முட்டை தோசை தொண்டையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு


புதுச்சேரி : முட்டை தோசை தொண்டையில் சிக்கி, மூச்சு திணறிய கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை எஸ்.பி.ஆர். நகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், 53; கூலித்தொழிலாளியான முருகனுக்கு மது பழக்கம் உள்ளது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில், தனது வீட்டில் முருகன் முட்டை தோசை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். தோசை தொண்டையில் சிக்கி, முருகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வாந்தியெடுத்த நிலையில், மார்பினை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தார்.உடனயாக அவரை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து, வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202218:53:37 IST Report Abuse
theruvasagan இலங்கையில் கடமை தவறிய சிறைக் கண்காணிப்பாளருக்கு தூக்கு தன்டணை. இங்க அதுமாதிரி நடந்தா டஜன் கணக்குல தூக்குல போட வேண்டி இருக்கும். எங்க கிட்ட ஊழல் செய்தவருக்கு பதவி உயர்வு கொடுப்பதுதான் தன்டணை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X