தரமான குடிநீர் கிடைக்குமா?
வி.எஸ்.கோபாலன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கிய, 'அம்மா குடிநீர்' திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனளித்தது. அனைத்து பேருந்து நிலையங்களிலும், 10 ரூபாய்க்கு குடிநீர் பாட்டில் விற்பனையானது. இதனால் தனியார் குடிநீர் பாட்டில்களின்
விலையும் உயராமல் இருந்தது.தற்போது அரசியல் காரணத்திற்காக, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 'அம்மா குடிநீர்' பாட்டில்கள் எங்கும் கிடைக்கவில்லை. பேருந்து நிலையத்தில், குடிநீர் விற்ற மையம் எல்லாம் பூட்டிக் கிடக்கின்றன.
மேலும் பெரும்பாலான பேருந்து நிலையங்களில், பல்வேறு தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் பெயரில் கிடைக்கும் குடிநீர் 1 லிட்டர், 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இதனால் பெரும்பாலான பயணியர், தங்கள் வீட்டிலிருந்தே குடிப்பதற்கு
தண்ணீர் எடுத்து வருகின்றனர்.ரயில் நிலையங்களில் இயந்திரம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. அது போல, பேருந்து நிலையங்களிலும் குடிநீர் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'அம்மா' என்ற பெயர், தி.மு.க., அரசுக்கு பிடிக்கவில்லை என்றால், என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டி கொள்ளட்டும்; மக்களுக்கு தரமான குடிநீர் கிடைத்தால் போதும்.பேருந்து நிலையத்தில் தரமான உணவகம், சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர் கிடைத்தால், அது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இளையோரின்கனவு நனவாகட்டும்!
ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம், இளையோர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சி தான். ஆனால் நம் நாட்டில் இளையோருக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லையே!
நன்கு கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் விளையாட்டில் திறமையுடைய இளைஞர்களை, நம் அரசு ஊக்குவிப்பதே இல்லை; அவரின் முன்னேற்றத்திற்கு உதவுவதே இல்லை. இதனால் பலரின் திறமை வெளிச்சத்திற்கு வராமலே, இருண்டு போய்
விடுகிறது.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரெட்டியூரில் சைக்கிளில் வைத்து, கர்நாடக மது பாக்கெட்டுகளை விற்ற, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு மாணவி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.விசாரணையில், படிப்பு செலவிற்காக மது பாக்கெட்டுகளை அவர் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. அம்மாணவி செய்தது, சட்ட விரோத செயல் தான். ஆனால் அந்த மாணவியை, இந்நிலைக்கு தள்ளியது, குடும்பத்தின் வறுமை என்பதை மறுக்க முடியாது.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில், எம்.பி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் ஒருவர், 2021 அக்டோபரில், கல்விக்கடனுக்கான முறையான ஆவணங்களை, எஸ்.பி.ஐ., வங்கி மேலாளரிடம் சமர்ப்பித்தார். பலமுறை மன்றாடிக் கேட்டும், இன்று வரையில் அவருக்கு கல்விக்கடன் கிடைக்கவில்லை.
இப்படி கல்வி, விளையாட்டில் ஆர்வம், திறமை இருந்தும், அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததால் பல இளைஞர் மற்றும் இளம்பெண்களின் கனவு நிறைவேறாமலேயே போய்விடுகிறது.ஆண்டுதோறும் இளையோரின் தினத்தை, சம்பிரதாயமாக ஒருநாள் மட்டும் கொண்டாடுவதால், எந்த பயனும் இல்லை.இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக, பட்ஜெட்டில் நலத் திட்டங்கள் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். செய்யுமா அரசு?nnn
போலீசாருக்குஎன்ன வேலை?என்.என்.கணேசபெருமாள், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்தாண்டு மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில், 46 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன; 125 பேர் மீது, குண்டர் தடுப்புச்
சட்டம் பாய்ந்துள்ளது.மது அருந்தி வாகனம் ஓட்டியோர், 732 நபர்கள்; 'ஹெல்மெட்' அணியாத 4.61 லட்சம் பேர்; சாலை விதிகளை மீறியதாக, ஒன்பது லட்சம் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, 6.87 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
'குற்றங்களைத் தடுக்க, மக்கள் ஒத்துழைப்பு அவசியம்' என்று, திண்டுக்கல் எஸ்.பி., சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
குற்றத்தை தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்ற கருத்தில், அனைவருக்கும் உடன்பாடு உண்டு தான்.ஆனால், குற்றத்தை தடுக்க வேண்டிய கடமை உள்ள காவல்துறையினர், அதை கைகட்டி வேடிக்கை பார்ப்பது எந்த வகையில் நியாயம்?திண்டுக்கல், 'ரவுண்ட்' ரோட்டில் அடுத்தடுத்து, 500 அடி தொலைவில் அமைந்திருக்கும் மூன்று பள்ளிகளுக்கு நடுவில், 'டாஸ்மாக்' கடை செயல்படுகிறது. இந்த கடையை அகற்ற, பொதுமக்கள், 100க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும், அரசு செவி சாய்க்கவில்லையே!
குற்றம் நடந்தாலும் பரவாயில்லை; மது மூலம் கிடைக்கும் வருவாய் தான் முக்கியம் என, அரசு நினைக்கிறதே!இது தொடர்பாக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பெரும் கலவரமே ஏற்பட்டும், இன்று வரை டாஸ்மாக் வியாபாரம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
திண்டுக்கல்லின், 'இதயப்பகுதியான' நாகல்நகரில், 4,000 சதுர அடிகளுக்குள் அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளன. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், அடுத்தடுத்து, 200 அடிக்கு, நான்கு டாஸ்மாக் கடைகள் உள்ளன.
குற்றம் நடக்க முக்கிய காரணமே, மது தான். இதை தட்டிக் கேட்க வேண்டிய காவல்துறை, டாஸ்மாக் கடைக்கு தான் பாதுகாப்பு தருகிறது எனும் போது, யாரிடம் முறையிடுவது?மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக, கடந்த ஒரு ஆண்டில், 732 வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி., புள்ளி விபரம் தெரிவித்துள்ளார்.அப்படியென்றால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, 150க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில், ஒரு நாளைக்கு வெறும் இரண்டே இரண்டு பேர் மட்டும் தான் மது அருந்தி வாகனம் ஓட்டி உள்ளனரா?
இது தான், போலீசார் கடமையின் வீரியமா?'ஹெல்மெட்' போடாதது, முகக்கவசம் அணியாதது போன்ற வழக்குகள் அதிக எண்ணிக்கையிலும்; மது குடித்து வாகனம் ஓட்டிய வழக்கு குறைவாக உள்ளதற்கும் காரணம், அரசின் கொள்கையும், போலீசாருக்கு கிடைக்கும்
மாமூலும் தான்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE