கோவை மாநகராட்சியை மிரட்டும் பெண் அதிகாரி!
''அரசு அலுவலகத்தை, கட்சி ஆபீஸ் போல பயன்படுத்திண்டு இருக்கார் ஓய்...'' என்றபடியே பெஞ்சுக்கு வந்தார், குப்பண்ணா.
''யாரு வே அது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவரா, தி.மு.க.,வைச் சேர்ந்த தேவேந்திரன் இருக்கார்... இவருக்கு, அரசு சார்புல ஜீப் மற்றும் தனி அறை ஒதுக்கீடு செய்திருக்கா ஓய்...
''வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் சேகர், ஒன்றியக் குழு துணைத் தலைவரா இருக்கார்... இவருக்கும், தலைவர் அறையில தனி சேர் மற்றும் டேபிள் போட்டிருக்கா ஓய்...
''இவர், அந்த அறையை கட்சி ஆபீஸ் போல பயன்படுத்திக்கறார்... பி.டி.ஓ., ஆபீஸ்ல அதிகாரிகள் துவங்கி ஊழியர்கள் வரைக்கும், தான் சொல்றதை தான் கேட்கணும்னு சர்வாதிகாரமா சொல்லிட்டாராம்... தலைவர் பாவம், எதையும் கண்டுக்காம 'தேமே'ன்னு இருக்கார் ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.
''நிஜமான விவசாயிகள் யார்னு, உளவு போலீசார் விசாரிச்சிட்டு இருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு வந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கூட்டுறவு கடன் தள்ளுபடியில நிறைய மோசடிகள் நடந்துட்டதால, சேலம், நாமக்கல் மாவட்டங்கள்ல, 83 ஆயிரம் பேருக்கு கடன் தள்ளுபடியை அதிகாரிகள் நிறுத்தி வச்சிருக்காங்க...
''அதே நேரம், இதனால நிஜமான ஏழை, எளிய விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறதா, அரசுக்கு தகவல்கள் போயிருக்குது பா... இதனால, நிஜமான விவசாயிகள் யார் யார்னு அரசு உத்தரவுப்படி உளவுத்துறை போலீசார் ரகசியமா விசாரணை நடத்திட்டு இருக்காங்க... சீக்கிரமே அறிக்கை, முதல்வர் கைக்கு போனதும், நிஜமான விவசாயிகளுக்கு தள்ளுபடி அறிவிப்பு வரும்னு சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''சென்னையில இருந்தபடியே, 'டார்ச்சர்' பண்ணுதாங்க வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அண்ணாச்சி.''யாருங்க அந்த அதிகாரி...'' என, பட்டென கேட்டார் அந்தோணிசாமி.
''கோவை விமான நிலையத்துக்கு பக்கத்துல, காளப்பட்டி ரோட்டுல நில உபயோகம் மாற்றம் செய்யாம, வணிக வளாகம் கட்டுறதுக்கு கட்டட அனுமதி குடுங்கன்னு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, சென்னையில இருக்கிற ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உத்தரவு போட்டிருக்காங்க வே...
''மாநகராட்சியின் உயர் அதிகாரி ஒப்புக்காததால, அவரை சென்னை அதிகாரி தாறுமாறா திட்டியிருக்காங்க... அது மட்டும் இல்லை... மாநகராட்சியில் தனக்கிருந்த பழைய பழக்கத்தை வச்சு, அந்த இடத்துக்கு முறைகேடா 'காலி மனையிட வரி'யை கட்டி, அதன் அடிப்படையில கட்டட அனுமதி கேட்டிருக்காங்க வே...
''இப்ப, காலி மனையிட வரியை கட்ட உதவிய அதிகாரியை, அந்தப் பதவியில இருந்து துாக்கியடிச்சிட்டாவ... இருந்தாலும், சென்னை அதிகாரி தன் முயற்சியை கைவிடாம முட்டி மோதிட்டு இருக்காங்க வே...'' என்றார் அண்ணாச்சி.
அரட்டை முடிந்து, பெரியவர்கள் கிளம்பினர். எதிரில் வந்த இரண்டு பெண்களில் ஒருவர், 'பெண் பாவம் சீரியல்ல, சாந்தாவால, புவனேஸ்வரிக்கு வேலை போன கதையோட என் வீட்டுல கரன்ட் கட்டாகிடுச்சு... அப்புறம் என்ன நடந்துச்சுடீ...' என பேசியபடியே செல்ல, பெரியவர்கள் சிரித்தபடியே நடையை கட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE