வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்-'கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், உள்நோயாளிகள் பிரிவில், 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான வழிகாட்டுதல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அனைத்து மருத்துவமனைகளும் தற்போதுள்ள கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் (உள்நோயாளிகள் பிரிவில்) 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், அதை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு, கடைசி நேரத்தில் ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்தது. தற்போது, தொற்று வேகமாக பரவி வந்தாலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன' என்றனர்.