திருப்புவனம் :மாநில அளவிலான நெல் விளைச்சல் போட்டியில் கீழடியைச் சேர்ந்த செல்லப்பாண்டி உட்பட 15 விவசாயிகள் சிவகங்கை மாவட்டம் சார்பாக பங்கேற்றுள்ளனர். வருடந்தோறும் நடைபெறும் நெல் விளைச்சல் போட்டியில் மாவட்ட அளவில் 15 ஆயிரமும், மாநில அளவில் ஐந்து லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததில் கீழடி, எஸ்.ஆர். பட்டினம், கோட்டையிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வேளாண் அதிகாரிகள் பரிந்துரைப்படி கருப்பு கவுனி, ஜே.ஜி.எல்., 1798, என்.எல்.ஆர்., உள்ளிட்ட ரகங்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.கீழடியில் நேற்று வேளாண் துணை இயக்குனர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நெல் அறுவடை நடந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல் எடை போடப்பட்டு விருதுநகர் வேளாண் உதவி இயக்குனர் (தரகட்டுப்பாடு) ராஜேந்திரன், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆதிமூலம் (திருப்புவனம்), ஆப்ரஹாம் (காளையார்கோயில்) ஆகியோர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. விவசாயிகளிடையே பாராம்பரிய நெல் விவசாயத்தை மேம்படுத்தவும் அதிக மகசூல் பெறவும், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லில் இருந்து விதை நெல் பெறவும் நெல் விளைச்சல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் பன்னீர்செல்வம் கூறுகையில்: 70 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட வேண்டும் என்ற இலக்கை தாண்டி 82 ஆயிரம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நெல் விளைச்சல் போட்டியில் அதிகளவு விவசாயிகள் பங்கேற்க வேண்டும், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் 11 ஆயிரம் எக்டேரில் உளுந்து சாகுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.