திருப்பூர்:பொங்கல் பண்டிகையான நேற்று, விடுமுறையில் உள்ள வடமாநில தொழிலாளர், 'பர்ச்சேஸ்' செய்ய களமிறங்கியதால், திருப்பூர் நகரப்பகுதி, பரபரப்பாக காணப்பட்டது.வாழ்வு தேடி வரும் வடமாநில தொழிலாளர்களால், திருப்பூர் மாநகரம், தனது இயல்பு நிலையிலயே மாற்றம் ஏற்படுத்தி கொண்டது. தீபாவளி பண்டிகையின் போது, திருப்பூர் மாநகரில் இரண்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது. வடமாநிலத்தவர், இரண்டாவது நாளில், தீபாவளியை கொண்டாடுகின்றனர்.ஆண்டுதோறும், தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது, வெளிமாவட்ட தொழிலாளர், சொந்த ஊர் சென்று விடுவர். வழக்கமான நெரிசல் இல்லாமல், திருப்பூர் நகர ரோடுகள் வெறிச்சோடி கிடக்கும். ஒரு சில நாட்களுக்குமட்டும், மூச்சுவிட முடியாமல் திணறும் ரோடுகள், ஓய்வெடுக்கும்.கடந்த சில ஆண்டுகளாக, இந்நிலை தலைகீழாக மாறிவிட்டது. காரணம், வடமாநில தொழிலாளர். தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சொந்த மாநிலம் செல்வதில்லை; இங்கேயே, பண்டிகையை கொண்டாடுவதால், திருப்பூர் மாநகரம், பண்டிகை நாட்களிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதியாக மாறிவிட்டது.பொங்கல் பண்டிகையின் முதல் நாளான நேற்று, சுற்றுப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டாலும், மாநகரப்பகுதியில் வழக்கத்தைவிட, தேர்க்கடைகள் போல் கூட்டம் அதிகம் காணப்பட்டது.பனியன் ஆடைகள், பேன்ட், சர்ட், வாட்ச், காலணிகள், பெட்ஷீட், ஸ்வெட்டர், பெல்ட் கடைகள் அதிகம் அமைந்திருந்தன. ஒவ்வொரு கடையிலும், வடமாநில தொழிலாளர் கூட்டமாக நின்று, பர்ச்சேஸ் செய்துகொண்டிருந்தனர்.இதுகுறித்து வடமாநில தொழிலாளர் கூறியதாவது:சொந்த மாநிலத்துக்கு, பாரம்பரிய திருவிழாவுக்கு மட்டும் சென்று வருவோம். ஒரு வாரம் சம்பாதித்ததை, செலவிட வேண்டும் என்பதால், அடிக்கடி ஊருக்கு செல்வதில்லை. தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில், கடை வீதிகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்குகிறோம்.எப்படியும், பண்டிகை நாளில், உள்ளூர் மக்கள் கூட்டம் இருக்காது; எங்களுக்கும் விடுமுறையாக இருக்கும். அதனால், பண்டிகை நாட்களில், காலை முதல் இரவு வரை, கடை வீதிக்கு சென்று, பர்சேஸ் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE