வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி உட்பட ஏழு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., சவுத்ரி அமர் சிங் ஆகியோர் சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தனர்.

உ.பி., மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ல் துவங்கி ஏழு கட்டங்களாக நடக்கிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பதவி வகித்து வந்த சுவாமி பிரசாத் மவுரியா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் பா.ஜ.,வில் இருந்தும் சமீபத்தில் விலகினார்.இவரை தொடர்ந்து பா.ஜ.,வை சேர்ந்த தரம் சிங் சைனியும் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகினார்.

சுவாமி பிரசாத் மவுரியாவின் விலகலைத் தொடர்ந்து, இரண்டு அமைச்சர்கள் உட்பட 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இருந்து வெளியேறினர்.இந்நிலையில் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ரோஷன்லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, முகேஷ் வர்மா, வினய் ஷாக்கியா, பகவதி சாகர் ஆகியோர் சமாஜ்வாதியில் நேற்று இணைந்தனர். அப்னா தள எம்.எல்.ஏ., சவுத்ரி அமர் சிங்கும் சமாஜ்வாதியில் நேற்று இணைந்தார்.