கடலுார் : கடலுார் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குழந்தை திருமணம், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னை போன்ற சம்பவங்களை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'போக்சோ' உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தும் சில இடங்களில் இப்பிரச்னை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்பாக பள்ளி பருவத்திலேயே மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக ஆலோசனைக் குழு அமைக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.இந்த ஆலோசனைக் குழுவில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சமூக ஆர்வலர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் என, 8 பேர் உள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும், மெட்ரிக் துவக்க பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 2,219 உள்ளன. இப்பள்ளிகளில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தை திருமணம், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் தடுப்பு குறித்து பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.'உன் பாதுகாப்புக்கு சில யோசனைகள்' என்ற தலைப்பில் வைத்துள்ள பேனரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், 'மாணவர் மனசு' என்ற தலைப்பில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக மாணவிகள் புகார் மனு அளிக்கலாம்.பெட்டியில் உள்ள புகார் மனு மீது பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பாதித்த மாணவியரிடம் விசாரணை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பர். 14417, 1098 என்ற அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெறலாம்' என்றார்.