புதுச்சேரி : புதுச்சேரியில் அறுவடை செய்யப்படும் சம்பா பட்ட நெல்லுக்கு கடந்தாண்டை விட விலை உயர்ந்து, உரம் மற்றும் அறுவடை இயந்திர வாடகை உயர்வை ஈடுகட்டியதால் விவசாயிகள்நிம்மதி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 19,510 ஹெக்டேர் விவசாய நிலம் உள்ளது. இவற்றில் 62 சதவீத நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. ஆழ்குழாய் பாசன வசதி உள்ளதால் சம்பா, நவரை மற்றும் சொர்ணவாரி என மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சம்பா பட்டத்தில் வெள்ளை பொன்னி, பொன்மணி மற்றும் பி.பி.டி., ரக நெல் அதிகளவில் பயிரிடப்பட்டது.
திருக்கனுார், செல்லிப்பட்டு, திருபுவனை, கீழூர், நெட்டப்பாக்கம், மடுகரை, வில்லியனுார், கரிக்கலாம்பாக்கம் மற்றும் பாகூர் உள்ளிட்ட பகுதியில் முன் பட்டத்தில் பயிரிடப்பட்ட நெற்கள் கடந்த இரு வாரங்களாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.இதனால், மதகடிப்பட்டு, கரையாம்புத்துார், மடுகரை, கூனிச்சம்பட்டு, கன்னியகோவில் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு நெல் வரத்து துவங்கியுள்ளது.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்திட புதுச்சேரி மற்றும் தமிழக வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால், நெல் கொள்முதல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.கடந்தாண்டு ரூ.850 முதல் 950 வரை விற்பனையான பொன்மணி நெல் இந்தாண்டு ரூ.1000 முதல் 1,200 வரை விலை உயர்ந்துள்ளது.
இதேபோன்று, ரூ.1000 முதல் 1,200 வரை விலை போன வெள்ளை பொன்னி இந்தாண்டு ரூ.1,400 முதல் 1,700 வரையிலும், ரூ,1,050 முதல் 1,200 வரை கடந்தாண்டு விலை போன பி.பி.டி., ரக நெல் இந்தாண்டு ரூ.1,350 முதல் 1,500 வரை உயர்ந்துள்ளது.
மூட்டைக்கு கடந்தாண்டை காட்டிலும் சராசரியாக ரூ.200 முதல் 400 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்வு மற்றும் அறுவடை இயந்திரத்தின் வாடகை உயர்வை ஈடுகட்டும் என்பதால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.நெல் வரத்து சீராக இருந்தால் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE