சிதம்பரம் : ஊக்கத் தொகை வழங்கக் கோரி மாவட்ட அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் 40 க்கும் மேற்பட்டோர் சிதம்பரத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டம்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவ மனையாக செயல்படுகிறது. இங்கு பயிற்சி டாக்டர்களாக பணி புரியும் மாணவர்கள், கொரோனா சிகிச்சை பணி, மக்களை தேடி மருத்துவம் உட்பட பல தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இம்மருத்துவமனை அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றும், பயிற்சி டாக்டர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவில்லை.
பிற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி பயிற்சி மாணவர்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.ஆனால் சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு ரூ. 3000 மட்டும் வழங்குகின்றனர். அந்த தொகையும் கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை.
கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பயிற்சி டாக்டர்கள் 40க்கும் மேற்பட்டோர் நேற்று மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தை துவக்கினர். மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் சார்பில் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களைப் போல் போராட்டம் நீண்ட காலம் தொடருமோ என போலீசார் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று மாலை போராட்டத்தை விலக்கிக் கொண்டு வீடுகளுக்கு சென்றனர். இன்று காலை மீண்டும் கவன ஈர்ப்பு போராட்டம் தொடரும் என கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE