தைப்பொங்கல் திருநாளை, ஈரோடு மாநகர், மாவட்டத்தில், மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உற்சாகமாக கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாள், உழவர்களின் அறுவடை திருநாள் எனப்படும், தை பொங்கல் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா, ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு நடுவே, மாநகர் மற்றும் கிராம பகுதியில், பொங்கல் விழா களை கட்டியது. தை முதல் நாளில் சூரியனை வரவேற்கும் விதமாக, இரவிலேயே வாசல்களில் வண்ணக்கோலமிட்டு பெண்கள் அசத்தினர். சூரிய உதயத்துக்கு பின் புனித நீராடி புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்தனர். உலகம் இயங்க உணவு படைக்க உறுதுணையாக திகழும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில், பொங்கலை படையலிட்டு வழிபட்டனர். பொங்கலை அக்கம்பக்கத்தினருக்கும் கொடுத்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
சமத்துவ பொங்கல்..: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் முன், கோட்டை மக்கள் சார்பில், சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கலையொட்டி மாநகரில் காசிபாளையம் மலை முருகன் கோவில், கருங்கல்பாளையம் சுப்ரமணியர் கோவில், பெரியமாரியம்மன், கோட்டை கஸ்தூரி அரங்கநாதர், ஆருத்ர கபாலீஸ்வரர், மகிமாலீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாட்டால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. புது டூவீலர்கள் வாங்கிய பலர், கோவில்களில் பூஜை போட்டனர்.
கலை போட்டிகளில் ஆர்வம்: கருங்கல்பாளையம் கலைத்தாய் அறக்கட்டளை அமைப்பு சார்பில், பாரம்பரிய பல்வேறு கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடந்த பிறகு, கலை நிகழ்ச்சிகள், தப்பாட்டாம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சாக்குபை ஓட்டம், இளவட்ட கல் தூக்கும் போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
ஸ்டேஷனில் பொங்கல்: கோபி போலீஸ் ஸ்டேஷன் முன், மகளிர் போலீசார் சர்க்கரை பொங்கல் வைத்து கொண்டாடினர். பின், போலீசார் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதேபோல் தி.மு.க., சார்பில் தெப்பக்குளம் வீதியில், பொங்கல் வைக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதேபோல் பவானி நகர தி.மு.க., செயலாளர் நாகராஜ் தலைமையில், பவானி நகராட்சியில் உள்ள, 27 வார்டு களிலும் கட்சிக் கொடியேற்றி, மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர்.
கோவில்களில் கொண்டாட்டம்: புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார், மாரியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், மக்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி யில், ஏர் கலப்பை பூட்டி, கன்றுக்குட்டிகளுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்தனர். பானை வைத்து மஞ்சள் குலை போட்டு கரும்பு வைத்து, பால் பொங்கும் போது, பெண்கள் குலவை எழுப்பி கொண்டாடினர்.
- நிருபர் குழு -