களைகட்டிய பொங்கல் திருவிழா; கோவில் மூடலால் பக்தர்கள் ஏமாற்றம்| Dinamalar

களைகட்டிய பொங்கல் திருவிழா; கோவில் மூடலால் பக்தர்கள் ஏமாற்றம்

Added : ஜன 15, 2022 | |
சேலம்: சேலத்தில் பலரும் வீடுகளின் முன் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆனால், கோவில்கள் மூடப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.கொரோனா சூழலால், பொங்கல் பண்டிகையில், நேற்று முதல், ஜன., 18 வரை கோவில்கள் மூடப்பட்டன. இதனால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், சேலத்தில் அனைத்து பகுதிகளிலும், வீடுகளின் முன் கரும்பு தோரணம் அமைத்து, பானையில் பொங்கல்

சேலம்: சேலத்தில் பலரும் வீடுகளின் முன் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆனால், கோவில்கள் மூடப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொரோனா சூழலால், பொங்கல் பண்டிகையில், நேற்று முதல், ஜன., 18 வரை கோவில்கள் மூடப்பட்டன. இதனால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், சேலத்தில் அனைத்து பகுதிகளிலும், வீடுகளின் முன் கரும்பு தோரணம் அமைத்து, பானையில் பொங்கல் வைத்து, சூரியனை வழிபட்டனர். பொங்கல் பொங்கிய போது, 'பொங்கலோ பொங்கல்' என கூவி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். இதில், வேட்டி சட்டை, சேலை, பட்டு பாவாடை உள்ளிட்ட புத்தாடைகள் அணிந்து கொண்டாடினர். அக்கம் பக்கத்தினருக்கு, கரும்பு, பொங்கல் உள்ளிட்டவை வழங்கி, வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். பல இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கூட்டாக பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது. சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆயுதப்படை: சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில், போலீசார், அவர்களின் குடும்பத்தினருக்கு, கோலப்போட்டி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் போட்டிகள் நடத்தப்பட்டன. பெண் போலீசார் பொங்கல் வைத்தனர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, கமிஷனர் நஜ்முல் ?ஹாதா பரிசுகளை வழங்கினார். உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் பங்கேற்றனர்.

இன்று மாட்டு பொங்கல்: கயிறு விற்பனை ஜோர்: இன்று கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்காக கால்நடைகளை வளர்ப்போர், கட்டுவதற்கான கயிறு, சலங்கை, கலர் பொடி, மூக்கணாங்கயிறு உள்ளிட்டவற்றை நேற்று வாங்கினர். செவ்வாய்ப்பேட்டை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கயிறு விற்பனை களை கட்டியது. 10 முதல், 1,500 ரூபாய் வரை கயிறு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சேலம் நகர்புறத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளிலிருந்து, பலர் வந்து கயிறு வாங்கிச்சென்றனர்.

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்: ஓமலூர், கோட்டமேட்டுப்பட்டி அய்யங்கரடில், தி.மு.க., சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அக்கட்சியின், சேலம் எம்.பி., பார்த்திபன், பெண்களுக்கு கரும்பு வழங்கி பேசுகையில், 'மாநில அரசு மக்களின் திட்டம், தேவை அறிந்து நிறைவேற்றி வருகிறது. பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' என்றார். பனமரத்துப்பட்டியில், நகர செயலர் வரதராஜன் தலைமையில், ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ்குமார், மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். மல்லூரில், நகர செயலர் சுரேந்திரன் தலைமையில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இடைப்பாடி, ஆலச்சம்பாளையத்தில், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கட்சி கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி, மேட்டுதெரு உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க., நகர செயலர் பாஷா கட்சி கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு, கரும்பு வழங்கி பொங்கல் விழாவை கொண்டாடினர். ஆத்தூர் நகர தி.மு.க.,வினர், பொங்கல் வைத்து, மக்களுக்கு வழங்கினர். அதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், 11ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, பொங்கல் வைத்து மக்களுக்கு வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X