சேலம்: வாழப்பாடி, நீர்முள்ளிகுட்டையை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 48. இவர், நேற்று முன்தினம் மதியம், 1:15 மணிக்கு, 'ஹீரோ ?ஹாண்டா சி.டி., டீலக்ஸ்' பைக்கில், சேலத்தில் இருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். உடையாப்பட்டி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத கார், பைக் மீது மோதியது. அதில், சிவப்பிரகாசம் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் இறந்து விட்டார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல், சேலம், சின்னதிருப்பதி, சின்னமுனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன், 50. கடந்த, 12 இரவு, 10:00 மணிக்கு, 'டியோ' மொபட்டில், டவுனில் இருந்து சின்னதிருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஏற்காடு பிரதான சாலையில், மத்திய சிறை முன் உள்ள வேகத்தடையில் ஏறியபோது, தடுமாறி விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.