எருது விழாவுக்கு தயாராகும் கிருஷ்ணகிரி காளைகள்| Dinamalar

எருது விழாவுக்கு தயாராகும் கிருஷ்ணகிரி காளைகள்

Added : ஜன 15, 2022 | |
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் நடக்கிறது. மாவட்டத்தை பொறுத்தவரை பாரம்பரியமிக்க எருதுவிடும் விழாவும் பிரபலம். ஜல்லிக்கட்டு விழாவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், எருது விடும் விழா என்பது, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழா. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் காளைகளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் நடக்கிறது. மாவட்டத்தை பொறுத்தவரை பாரம்பரியமிக்க எருதுவிடும் விழாவும் பிரபலம். ஜல்லிக்கட்டு விழாவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், எருது விடும் விழா என்பது, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழா. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் காளைகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, இரு கொம்புகளுக்கு இடையே பதாகைகளை கட்டுவர். இவ்வாறு அலங்கரிக்கப்படும் காளைகளை ஊரிலுள்ள பொது மைதானத்தில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் கட்டி காளையை ஓடவிட்டு தலையில் இருக்கும் வண்ண பதாகைகளை பறிப்பவர்களுக்கு பரிசு வழங்குவர். இதில் கலந்து கொள்ள இம்மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் பட்டாளம் திரண்டு திருவிழா கோலம் காணும். இதை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக வருவர். தடுப்பு கம்பால் அமைக்கப்பட்டுள்ள வேலிக்குள் அவர்கள் இருந்தவாறு துள்ளி குதித்து வரும், காளைகளை பிடிக்க, இளைஞர்கள் ஓடி வருவதை ஆர்வத்துடன் பார்ப்பர்.
ஜல்லிக்கட்டு மீதான தடை விலக்கப்பட்டு, ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், எருது விடும் விழாவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் களை கட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களில் இந்த விழா வெகு ஜோராக நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், பல பகுதிகளில் எருதுவிழா விடும் விழாவுக்கு அனுமதிகோரி, 500க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர். இந்த விழாவுக்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்படுகின்றன. எருது விடும் விழாவை புத்துணர்ச்சியுடன் கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்ட காளை விடுவோர் தயார்நிலையில் உள்ளனர். இதற்காக காளைகளை வளர்ப்போர், அதற்கு நீரில் நீந்துதல், காளைகளை ஓடவிட்டு பிடித்தல் உள்ளிட்ட பயிற்சிகளுடன் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, வாழைப்பழம், முட்டை, தானியம் கலந்த கூழ் உள்ளிட்ட சத்தான உணவுகளையும் வழங்கி வருகின்றனர். காளையை அடக்க இளைஞர்களும், மாவட்டம் முழுவதிலும் எருது விடும் விழாவை கோலாகலமாக கொண்டாட மக்களும், தயாராகி வருகின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X