சென்னை: தமிழக அரசு சார்பில் 2021ம் ஆண்டுக்கான ‛பெருந்தலைவர் காமராசர் விருது' முனைவர் குமரி அனந்தனுக்கும், பெங்களூருவில் வாழ்ந்துவரும் மு.மீனாட்சி சுந்தரத்திற்கும் 2022ம் ஆண்டிற்கான ‛அய்யன் திருவள்ளுவர் விருதும்' வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும், திருக்குறள் தொடர்பான தொண்டு புரிந்து வருபவர்களுக்கு ‛அய்யன் திருவள்ளுவர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டு பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக பெங்களூருவில் வசிக்கும் திருச்சியை சார்ந்த மு.மீனாட்சி சுந்தரத்திற்கு (வயது 78) தமிழக அரசு, 2022ம் ஆண்டிற்கான ‛அய்யன் திருவள்ளுவர் விருது' வழங்குகிறது.

அதேபோன்று, காமராசருடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், எம்.பி., எம்எல்ஏ ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும் சிறந்த நூல்களை படைத்தவரும் பன்முகத் திறன் கொண்ட சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு (வயது 88) தமிழக அரசு, 2021ம் ஆண்டிற்கான ‛பெருந்தலைவர் காமராசர் விருது' வழங்குகிறது.
விருது பெறும் இருவருக்கும் விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழக முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE