சென்னை:ரேஷன் கடைகளில் இம்மாதத்திற்கான வழக்கமான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை, நாளை முதல் வாங்கலாம்.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன. பொங்கலை முன்னிட்டு 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வினியோகம், 4ம் தேதி முதல் துவங்கியது. இதனால், இம்மாதத்திற்கான வழக்கமான பொருட்கள் வழங்கப்படவில்லை.
பொங்கல் பரிசு பொருட்களை கடைகளுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதால், கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வழக்கமான பொருட்களை வழங்குமாறு, பலரும் கோரிக்கை விடுத்தனர்.அவற்றை இம்மாதம் 12ம் தேதி முதல் வினியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு உணவு வழங்கல் துறை உத்தரவிட்டது. இருப்பினும், பொங்கல் பரிசு தொகுப்பை, பொங்கலுக்கு முன் வாங்க வேண்டும் என்று விரும்பிய பலரும், 13ம் தேதி காலை முதல் ரேஷன் கடைகளுக்கு படையெடுத்ததால் கூட்டம் அலைமோதியது.
பெரும்பாலான கடைகளில் அன்று இரவு 9:00 மணி வரை, பரிசு தொகுப்பு வினியோகிக்கப் பட்டது. அன்றைய நிலவரப்படி, 2 கோடியே 773 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது, மொத்த கார்டுதாரர்களில் 92.74 சதவீதம். இன்னும் 15.20 லட்சம் பேருக்கு மட்டும் வழங்க வேண்டியுள்ளது. பொங்கல் பரிசு வாங்காதவர்கள், வரும் 31ம் தேதி வரை வாங்க, அரசு அவகாசம் அளித்துள்ளது.
நாளை ரேஷன் உண்டு\
எனவே, இதுவரை பொங்கல் பரிசு வாங்காதவர்கள், நாளை ரேஷன் கடைகளுக்கு சென்று, பொங்கல் பரிசு வாங்கலாம். அனைத்து கார்டுதாரர்களும் இம்மாதத்திற்கான வழக்கமான உணவு பொருட்களையும் வாங்கலாம்.ரேஷன் கடைகளில் மேற்கண்ட பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE