குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் செங்கல் உற்பத்தி அதிகளவு காணப்படுகிறது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது பெரிய நகரங்களில், அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்த மத்திய, மாநில அரசுகளும் தற்போது ஏழை, எளியவர்களுக்கு வீடு என்பது அவசியம் என்பதை உணர்ந்து, வீடு கட்டும் திட்டம் அறிவித்து, வீடுகள் கட்டித்தந்து வருகிறது. வீடு கட்ட தேவையான செங்கல் உற்பத்தி, குமாரபாளையம் பகுதியில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது குறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: செங்கல் ஒன்று, 7.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கான செம்மண், சேலம் மாவட்டம் மேச்சேரி, தர்மபுரி மாவட்ட பகுதிகளில் கிடைக்கிறது. இப்பகுதியில், செங்கல் தயாரிக்க தேவைப்படும் தண்ணீர், போதுமான அளவு கிடைக்காததால், செங்கல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதிகளில்தான் செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால்தான் விவசாயம் செய்யவும், கால்நடைகள் மற்றும் இதர தொழில்கள் செய்யவும் போதுமான தண்ணீர் கிடைக்கும். வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத சில மாதங்களில், செங்கல் தயாரிப்புக்கு லாரிகளில் மற்றும் டிராக்டரில் கொண்டு வரும் தண்ணீரை அதிக பணம் கொடுத்து வாங்கி, செங்கல் தயாரிக்க வேண்டியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE