சென்னை:தமிழகத்தில் ஒரே நேரத்தில், புதிய மருத்துவ கல்லுாரிகள் துவக்கப்பட்டது, கடந்த அ.தி.மு.க., அரசின் சாதனை என்றும், இதில் தி.மு.க., பெருமை தேடி கொள்ள வேண்டாம் என்றும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
இது குறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லுாரிகளை, மத்திய அரசின் நிதியுதவியில் அமைக்கும் பணிகள், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் இணக்கமான நடவடிக்கைகளால் மேற்கொள்ளப் பட்டன. இந்த பணிகள் முடியும் தருவாயில், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, புதிய மருத்துவ கல்லுாரிகளை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியுள்ளார்.அதில், 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, மருத்துவ கல்லுாரி அமைக்கும் திட்டமிடலை செய்து, அது இப்போது நிறைவேறியிருப்பதை போல அவர் பேசியிருக்கிறார். தி.மு.க., ஆட்சியில், இந்த 11 மருத்துவ கல்லுாரிக்கான ஒரு திட்ட மிடலும் நடக்கவில்லை என்பதே உண்மை.
தமிழகத்தில் தி.மு.க.,வும், மத்தியில் காங்.,கும், ஆட்சியில் இணக்கமாக இருந்த காலத்தில் விழுப்புரம், திருவாரூர் மற்றும் தர்மபுரி மருத்துவ கல்லுாரிகள் மட்டும் திறக்கப்பட்டன. அப்போதே அனைத்து மாவட்டங்களுக்கும், மருத்துவ கல்லுாரிகளை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அப்போதைய தி.மு.க., அரசு செய்யவில்லை.
மாறாக ஆட்சி முடியும் தருவாயில், மக்களை ஏமாற்றுவதற்காக, மருத்துவ கல்லுாரிகள் அமைப்பது தொடர்பாக ஒரு அரசாணையை மட்டும் பிறப்பித்தனர். ஆனால், இந்தியாவில் எந்த மாநிலமும் சாதிக்காத வகையில், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லுாரிகள் உருவாக்கிய சாதனையை, அ.தி.மு.க.,வே செய்துஇருக்கிறது.
17 ஆண்டுகள்
இதை பாராட்டாமல், கருணாநிதியின் கனவு நிறைவேறியுள்ளதாக, முதல்வர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. உண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவே நிறைவேறிஉள்ளது.
மத்திய அரசில், 17 ஆண்டுகள் தி.மு.க., அங்கம் வகித்த போது, மாநில சுயாட்சி ஏற்படுத்துவது, கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவது, மத்திய வரி பகிர்வு முறை குறைந்து கொண்டே வருவது, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லுாரி என்பது குறித்தெல்லாம், வாய் திறக்காமல் மவுனியாக இருந்து விட்டு, மருத்துவ கல்லுாரி அமைப்பதில் சாதனை படைத்துள்ள அ.தி.மு.க.,வை குறை கூறுவது கண்டனத்துக்குரியது.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கேற்ப, தி.மு.க., என்கிற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்பட்டு, மீண்டும் அ.தி.மு.க., என்ற பொதுநலம் வீறுகொண்டு எழும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE