'லெப்ட்'டில் திரும்பிடும் கொரோனா!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், த.மா.கா., தலைவர் வாசன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு வழிபாட்டு தலங்களை மூடுவது போல, ஏராளமானோர் கூடும் 'டாஸ்மாக்' கடைகளையும் மூட வேண்டும்...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'கொரோனா பற்றி, தி.மு.க., அரசுக்கு தான் நல்லா தெரியும்... கொரோனா வைரஸ், டாஸ்மாக் பக்கம் போகாமல், 'லெப்ட்' எடுத்து, கோவிலுக்கு வரும்
பக்தர்களை மட்டுமே தாக்கும் என்பது, தி.மு.க., 'விஞ்ஞானி'களுக்கு மட்டுமே தெரியும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'இது கூட மக்களுக்கு தெரியாதா?'
மதுரை விமான நிலையத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தமிழகத்தில், 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது என்பதற்கு பதிலாக, 'கொரோனா நிதி வழங்கப்படுகிறது' எனக் கூறலாம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கரும்பு கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், அவரை குற்றத்துக்கு துாண்டிய அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுப்போம் என சொல்லவில்லையே, கவனித்தீரா... பொங்கல் பரிசு என பணம் கொடுத்தால் 'கமிஷன்' கிடைக்காது என்பதால், பொருட்களை கொடுத்தாங்க... இது கூட, மக்களுக்கு தெரியாதா என்ன...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
'மிரட்டினால் ஓட்டு போடுவாங்களா?'
பஞ்சாப் காங்., அரசின் அலட்சியத்தை கண்டித்து, பா.ஜ., சார்பில், கோவை, கிணத்துக்கடவு பகுதியில் கையெழுத்து இயக்கம் சமீபத்தில் நடந்தது. அப்போது, அக்கட்சியின் விவசாய அணி தலைவர் நாகராஜன், நிருபர்களிடம் கூறுகையில், 'தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாள் முதல், விவசாயிகளை குறிவைத்து மிரட்டி அக்கட்சியில் ஆட்களை சேர்க்கின்றனர்... பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்களை மஹாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொள்முதல் செய்து, தமிழக விவசாயிகளை புறக்கணிக்கும் செயலில், தி.மு.க., அரசு ஈடுபட்டது...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'ஒருத்தரை மிரட்டி, கட்சியில் சேர்க்கலாம்... ஆனால், அவரை ஓட்டு போட வைக்க முடியுமா? தி.மு.க., தலைவரின் குடும்பம், நாடு முழுதும் வியாபாரம் செய்யுது.. அதனால அங்கே எல்லாம் பொருட்களை வாங்கி, தமிழர்களின் தலையில் கட்டுறாங்க பா...' என்றதும்,
சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE