பஞ்சாப் மக்களை கலாய்க்கிறார்!
ஆர்.பாலாஜி, தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்குவோம்' என்று, பஞ்சாப் சட்டசபை தேர்தல் களத்தில் வாக்குறுதி வழங்கி வருகிறார், ஆம் ஆத்மி நிறுவனரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.இன்றைய விலைவாசி உயர்வில், 1,000 ரூபாய் என்பது, ஐந்து நாட்களுக்கு கூட போதாது.ஆனால், 'மாதத்திற்கு 1,000 ரூபாய் தரப்படும்' எனக் கூறி, பஞ்சாப் மக்களை வெறுப்பேற்றி கலாய்த்து வருகிறார், கெஜ்ரிவால்.இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே, செல்வச் செழிப்போடு மக்கள் வாழும் ஒரு மாநிலம் உண்டு என்றால், அது பஞ்சாப் தான். அதனால் தான், வேலைக்கே செல்லாமல், பஞ்சாப் மாநில விவசாயிகள் பலர், ஒன்றேகால் ஆண்டுகள் டில்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தினர்.அது மட்டுமல்ல...போராட்டத்தை முடித்து திரும்பும் போது, கவர்ச்சி நடனமணிகளின் மீது ரூபாய் நோட்டுகளை வீசி எறிவது போல, வீதியெங்கும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை சிதற விட்டு சென்றனர். பஞ்சாப் மக்களின் செல்வச் செழிப்பை கண்டு, நாடே திகைத்தது.அப்படிப்பட்ட மாநிலத்தின் தேர்தல் பிரசாரத்தில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குவோம்' என்று வாக்குறுதி அளிக்கிறார், கெஜ்ரிவால்.இத்தனைக்கும், ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதி வென்று அரசு அதிகாரியாகவும் சில காலம் குப்பை கொட்டி இருக்கிறார், இந்த அரவிந்த் கெஜ்ரிவால்!ஒரு வேளை, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வென்று ஆட்சியில் அமர்ந்து விட்டால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர் திருவோடு வழங்குவார் என்பது மட்டும் நிச்சயம்.
பிரதமரைமிரட்ட முடியாது!
சி.ஜெகதீஷ், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஞ்சாபில், நம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் பல விவாதங்களை துவக்கி வைத்துள்ளது.நம் நாட்டில் ஒரு தலைவன் இரும்பு மனிதனாக உருவாகும் போது, எதிரி தேசங்கள் அதை சாதாரணமாக விடுவதில்லை.இந்திய தலைவர்களின் மிகப்பெரிய பலவீனமாக இருந்தவை, அவர்களின் குடும்பம் மற்றும் சொத்து தான்.இதனாலே பல பிரச்னைகளில், பிரதமராக இருந்த பலர் அதை சந்திக்காமல் பின்வாங்கினர். காஷ்மீர் விவகாரம், அதற்கு ஒரு உதாரணம்.
பிரதமர் பதவியில் அமர்ந்த அனைவரும் பல வகை சங்கிலியால் முடக்கப்பட்டனர். சொந்தம், கைகளை கட்டியது; சொத்து, கால்களை கட்டியது.ஆனால் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் வகையறா அப்படி அல்ல; அவர்கள் சன்னியாசி கோலங்கள்; சொந்தம், சொத்து இவற்றை காட்டி, அவர்களை மிரட்ட முடியாது.அவர்கள், ஆண்டி பண்டாரங்கள். உடுத்திருக்கும் உடையை தவிர, வேறு சொத்து எதுவும் இல்லை.எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பலமான பிரதமர் கலாசாரத்தை, பா.ஜ., துவக்கி இருக்கிறது. இது நாட்டுக்கு நல்லது.ரஷ்ய அதிபர் புடின் மர்மமானவர்; அவரின் குடும்பத்தார் புகைப்படம் கூட யாருக்கும் தெரியாது.சீன அதிபர் ஷீ ஜின்பிங்கின் வாழ்வு மற்றும் குடும்பம் குறித்த விஷயம் ஏதும் பொதுவெளிக்கு வராது.ஆம்... உறுதியான தலைவனுக்கு, குடும்பம் ஒரு விலங்கு அல்லது பலவீனம் என்பதால், அவர்கள் அதை மறைத்து வலம் வருகின்றனர்.ஆனால் பா.ஜ.,வோ, குடும்பம் மற்றும் ஆசையை துறந்த நபர்களை, நாட்டின் தலைவர் பொறுப்பில் அமர செய்து, உலகுக்கு வழி காட்டியுள்ளது.உறுதியான தலைவராக மோடி இருப்பதால் தான் காஷ்மீர், காசி உள்ளிட்ட இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், சீனா ஆகியவற்றை வலிமையுடன் எதிர்கொள்ள
முடிகிறது.சீனாவும், ரஷ்யாவும், இன்னும் பல நாடுகளும் என்னென்னவோ செய்து தங்கள் நாட்டின் பீடங்களை காக்கும் போது, இந்தியா தன் பாரம்பரியமான ஹிந்து தத்துவத்தின் படி ஆன்மிக தலைவனால் தன்னை ஆண்டு
கொள்கிறது.
கடனாளிகளைஉருவாக்காதீர்!
ஸ்ரீ.சாரங்கா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., அரசு, 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, நாட்டிலேயே அதிகமாக கூட்டுறவு துறை மூலம் கடன் தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது' என்று, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்து உள்ளார்.தமிழக அரசின் கஜானா காலியாக இருக்கும் போதும், இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இது, கடனில் தத்தளிக்கும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்; அதே நேரம், வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.
'தள்ளுபடி சலுகையால், கடனை திருப்பிச் செலுத்தும் எண்ணம் மக்களிடையே குறைந்து வருகிறது' என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 'நிச்சயம் தள்ளுபடி ஆகும்' என்ற நம்பிக்கையில், கடன் பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.மாநில விவசாய கடன், பெருவாரியாக கிராமப்புற கூட்டுறவு வங்கி மற்றும் சங்கத்தால் கொடுக்கப்படுகின்றன. இவை, ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு உட்படாததால், ஊழல் நடக்க பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
கடந்த 2012ல் இறந்தவருக்கு, 2019ல் கடன் கொடுக்கும் அளவிற்கு எந்தவித தணிக்கையும் இன்றி, ஊழல் செவ்வனே நடந்து வந்துள்ளது.வாராக்கடன் அளவு ஆண்டுதோறும் அதிகரித்தபடியே இருக்கிறது. விவசாய நில உரிமையாளர்கள், இவ்விஷயத்தில் அதிகப்படியாக பயனடைகின்றனர்.மத்திய அரசு கடந்த அக்டோபரில், வங்கி ஒழுங்குமுறை கொள்கையில் திருத்தம் செய்து, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு
உட்படுத்தியது.கூட்டுறவு வங்கிகளின் செயல்படாத சொத்து மற்றும் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டது.மாநில அரசு, இஷ்டத்துக்கு கடன் தள்ளுபடி செய்து வரும் நிலையில், அனைத்து கூட்டுறவு வங்கிகளையும், ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு உட்படுத்தும் நிர்ப்பந்தம் ஏற்படலாம்.
அதனால், இது போன்ற கடன் தள்ளுபடி நடவடிக்கையை, அரசின் சாதனையாக பிரகடனப்படுத்தி, மேலும் பல கடனாளிகளை உருவாக்கி, உழைப்பின்மையை
ஊக்குவிக்க வேண்டாம்.
காங்கிரசின் நிலைப்பாடு என்ன?
வி.கோபால், குமரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், 'கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, 'நீட்' தேர்வு. மாநிலங்கள் என்ன தான் எதிர்த்தாலும், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி இத்தேர்வை ரத்து செய்ய முடியாது. நல்லவேளை நான் இந்தியாவில் படிக்காமல் அமெரிக்காவில் படித்தேன்...' என்று பேட்டி அளித்து இருக்கிறார்.சாதாரணமாக அன்னாரது இந்த பேட்டியை படிப்போருக்கு, 'அடடா... 'மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சீமந்த புத்திரன் கார்த்திக்குக்குத் தான், கிராமப்புற மாணவர்கள் மீது எவ்வளவு அக்கறை!' என்று வியக்கத் தோன்றும்.ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தான், அன்னார் எவ்வளவு தற்பெருமை பீற்றிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வரும்.'நல்லவேளை நான் இந்தியாவில் படிக்காமல், அமெரிக்காவில் படித்தேன்' என்கிறார். இவர் அமெரிக்காவில் படித்து வாங்கிய பட்டங்களுக்கு, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவசியமே இல்லை.ஆனால், இந்தியாவில் நடக்கும் நுழைவுத் தேர்வை எழுத அஞ்சியே, அவர் அமெரிக்காவுக்கு சென்று படித்தது போல, 'புருடா' விடுகிறார்.கார்த்தி சிதம்பரத்திடம் மிதமிஞ்சிய செல்வச் செழிப்பு இருக்கிறது. அதனால் அவர் அமெரிக்கா சென்று படித்தார்; நம் பிள்ளைகளால் அது முடியுமா?அடுத்து அந்த 'நீட் தேர்வு வழக்கில் அரசுக்கு ஆதரவாக வாதாடி, வெற்றியும் பெற்றவர் என் தாய் நளினி சிதம்பரம் தான்' என்பதையும், கார்த்தி சொல்ல வேண்டியது தானே? அரசியல்வாதிகள் எவ்வளவு புளுகினாலும், மக்களாகிய மடையர் கூட்டம் கேட்டுக் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தால், இவ்வளவு, 'புருடா'க்கள் வெளியாகின்றன.
அதெல்லாம் சரி... இந்த நீட் தேர்வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்பதை மட்டுமாவது தெளிவாகச் சொல்லுங்கள் கார்த்தி சிதம்பரம்!
இது என்னநியாயம்?
எஸ்.செபஸ்டின், சிவகாசி-, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில், 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த பாதகனுக்கு, மாவட்ட மகிளா நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், மகிளா நீதிமன்ற தீர்ப்பை ஊர்ஜிதம் செய்து உத்தரவிட்டனர்.பெண் குழந்தையை இழந்த ெபற்றோரின் மனவேதனையை உணர்ந்து, குற்றத்தின் தீவிரத்தை புரிந்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இது மாதிரியான தீர்ப்புகள், குற்றத்தில் ஈடுபட நினைப்போருக்கு கிலியை ஏற்படுத்தும்; குற்றம் நடப்பதை தடுக்கும். ஆனாலும் நீதிமன்றங்களில் நடக்கும் சில நிகழ்வுகள், சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.கொலை, பாலியல் வன்புணர்வு போன்ற வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என, குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர்.
அப்படியென்றால் குற்றத்தை நிகழ்த்தியது யார்?குற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எப்படி, எவ்வகையில் நீதி கிடைக்கும்?சில வழக்குகளில், கீழமை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். குற்றவாளி ஏழ்மையானவராக இருந்தால், அந்த தண்டனையை அனுபவிப்பார்.
அதே நேரம் வசதி படைத்தவராக இருந்தால், மேல்முறையீடு செய்து, தண்டனையில் இருந்து தப்பித்து விடுவார் அல்லது குறைந்தப்பட்ச தண்டனையை பெறுவார்.குற்றம் செய்த அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் தங்களது பண பலத்தால் ஜாமினில் வெளிவந்து, ஊர் சுற்றுவர்.ஜாமினில் வெளிவரும் குற்றவாளி, தனக்கு எதிராக சாட்சி சொல்வோரை மிரட்டுவார். இதனால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என, வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
இது என்ன நியாயம்?சமீபத்தில் கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, சம்பந்தப்பட்ட கிறிஸ்துவ மதபோதகரை, நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.நீதி என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். குற்றம் யார் செய்தாலும், தண்டனை கிடைக்க வேண்டும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.
எல்லாத்தையும்நிறுத்துங்கள்
இம்ரான்!கே.நாகலட்சுமி, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜம்மு -- காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் ஈடுபடுவதாக, நம் நாட்டின் பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படை குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானுக்கு இதே வேலையாக போச்சு! 'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போக போறானாம்' என்ற ஒரு சொலவடை உண்டு.பாகிஸ்தான் தோன்றியது முதல், அதற்கு ஜம்மு - காஷ்மீர் மீது ஒரு கண் உண்டு. காஷ்மீர் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்களை கொன்று வருகிறது.பாகிஸ்தான் பிரதமராக யார் வந்தாலும், அந்நாட்டை ஆள்வதில் அக்கறை செலுத்தாமல், காஷ்மீரை அபகரிக்கத் தான் நினைக்கின்றனர்; இதற்காக, கோடிக்கணக்கான ரூபாயையும்
செலவழிக்கின்றனர்.பாகிஸ்தான் தேசிய வருவாய், நம் மஹாராஷ்டிராவின் மாநில ஆண்டு வருமானத்தை விட குறைவு. பாகிஸ்தான் தற்போது மிகப்பெரிய பொருளாதாரச் சரிவை சந்தித்து வருகிறது.அங்குள்ள ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல், இந்தியாவில் நாச வேலை செய்வது எப்படி என்றே யோசிக்கின்றனர்.
பாக்., பிரதமர் இம்ரான் கான், சர்வதேச மாநாடுகளில் இந்தியாவைப் பற்றி எவ்வளவு புகார் கூறினாலும் அது எடுபடவில்லை; முஸ்லிம் நாடுகள் கூட, அவர் புகாரை ஏற்கவில்லை.'பாகிஸ்தானில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை மோசமாக உள்ளது' என, அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் இரண்டாவது மனைவி ரேஹாம் கூறியுள்ளார்.
'பாகிஸ்தானில் பெரும் ஊழல்வாதியாக பிரதமர் இம்ரான் கான் உள்ளார்' என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.போதும் இம்ரான் கான்... இந்தியாவிற்கு எதிரான வேலையை எல்லாம் நிறுத்துங்கள்; உங்கள் நாட்டின் வளர்ச்சி மீது கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE