சென்னை:கடந்த 2021ம் ஆண்டில், ஐந்து புயல்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, 750 பேர் உயிரிழந்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆண்டறிக்கை விபரம்: நீண்ட கால சராசரி வெப்ப நிலையை கணக்கிட்டால், 2016க்கு பின் 2021ம் ஆண்டில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் மார்ச் முதல் மே வரையிலும், பின், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும், இயல்பான அளவை விட வெப்பம் அதிகமாக பதிவானது.
நாட்டின் வருடாந்திர சராசரி மழை அளவை பொறுத்தவரை, 105 சதவீதமாக உள்ளது. இதில், தென்மேற்கு பருவ மழை 99 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவக் காற்று வீசும் காலமான, அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 144 சதவீதம் மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, தெற்கு கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில், மழை உபரியாக பெய்துள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளும் 2021ல் நிகழ்ந்தன.இந்திய கடற்பகுதியில் கடந்த ஆண்டில், 'டவ்தே, யாஸ், ஷாஹீன், குலாப் மற்றும் ஜாவத்' ஆகிய ஐந்து புயல்கள் உருவாகியுள்ளன.
இவற்றில் டவ்தே, ஷாஹீன் ஆகியன அரபிக்கடலிலும், மற்றவை வங்கக் கடலிலும் உருவாகின.டவ்தே புயல், கேரளா முதல் குஜராத் வரை அதிக மழை மற்றும் சூறாவளியால் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த புயல் பாதிப்பில் 144 பேர் உயிரிழந்தனர். யாஸ் புயலால் ஒன்பது பேர்; குலாப் புயலால் 19 பேர் பலியாகினர்.
கடந்த 2021ல் பெய்த பருவ மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், நாடு முழுதும் 750 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 340 பேர்; உத்தரகண்டில் 143; ஹிமாச்சல பிரதேசத்தில் 55; கேரளாவில் 53; ஆந்திராவில் 46 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், இடி, மின்னல் பாதிப்பால், நாடு முழுதும் 780 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஒடிசாவில் 213 பேர் பலியாகியுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE